25 ஆண்டுகளுக்கு திமுகவை தோளில் சுமப்பார் உதயநிதி: அமைச்சர் சேகர்பாபு!
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் என்ற சலசலப்பு கடந்த சில மாதங்களாகவே இருந்து வந்தது. ஆளுநர் மாளிகையில் இருந்து நேற்று இரவு வெளியான அறிவிப்பு அமைச்சரவை மாற்றத்தை உறுதி செய்துவிட்டது. அதில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்பதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மனோ தங்கராஜ், க.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகிய மூன்று பேர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியான செந்தில் பாலாஜி மற்றும் கோவி. செழியன், ராஜேந்திரன், நாசர் ஆகிய நான்கு பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். புதிய அமைச்சர்களுக்கான இலாகா அறிவிக்கப்படவில்லை. மேலும் பல அமைச்சர்களின் இலாகா மாற்றப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 3.30 மணியளவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். இது அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானதை, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வரவேற்று வருகின்றனர். சினிமா பிரபலங்களும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரத்தில் அதிமுக, நாம்தமிழர், பாஜக, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதை வாரிசு அரசியல் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் நடிகர் விஜய் அரசியல் என்ட்ரி ஆகியுள்ளதால், உதயநிதி துணை முதல்வராக்கப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். இந்நிலையில், துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ளது குறித்து, சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-
தமிழக முதல்வர் ஸ்டாலினின் பணிகளுக்கு ஏற்கனவே தோல் கொடுத்து பணியாற்றியவர் இன்று களத்திலே மக்கள் நலனில் அக்களை கொண்டு மக்கள் பணியாற்றியதான் வாயிலாக கடந்த 7 ஆண்டுகளில் இயக்கத்தையும், தமிழக மக்களின் முன்னேற்றத்துக்கும் அரும்பாடு பட்டவர் உதயநிதி. மக்களுடைய நலன் எது என்பதை முழுமையாக அறிந்தவர். இயக்கத்தின் வளர்ச்சிக்கு என்னென்ன தேவைகள் என்பதை முழுமையாக அறிந்தவர். எனவே, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், முதல்வரின் தலைமையில் அமைந்திருக்கக் கூடிய இந்த ஆட்சியினுடைய புதிய திட்டங்களை உருவாக்கி மக்கள் நலன் பயக்கின்ற வகையில் அவருடைய பணி சிறக்கும் என்ற நம்பிக்கை ஒட்டுமொத்த திமுக உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் உள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் பொதுமக்களும், கட்சியினரும் காத்திருக்கிறோம்.
பாஜகவைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் தகுதியில்லாத இயக்கம். அதனால்தான் தமிழகத்தில் இருக்கின்ற 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அவர்களுக்குத் தோல்வியை மக்கள் பரிசாக அளித்துள்ளனர். எந்த முடிவாக இருந்தாலும் முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் முடிவிற்கு பொதுமக்களும், கட்சி உறுப்பினர்களும் வரவேற்பை அளிப்பார்கள். அனைத்து தகுதியையும் பொருந்தியவர் உதயநிதி. 25 ஆண்டுகாலம் திமுகவையும், தமிழக மக்களின் நலனையும் தன்னுடைய தோலில் சுமக்கும் அளவிற்கு திடகாத்திரமிக்க உணர்வு கொண்டவர் துணை முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள உதயநிதி ஸ்டாலின் என்பதை அனைவரும் நன்றாக அறிவார்கள். தமிழக மக்களிடம் செல்லாக் காசாகிவிட்ட பாஜகவின் கூற்றுக்கு நாங்கள் செவிசாய்க்கத் தயாராக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.