விரைவில் மாநிலம் முழுதும் உதயநிதி சுற்றுப்பயணம்..!
தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வாயிலாக, ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதற்காக, 4.73 லட்சம் சுயஉதவி குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில், ஆண்களை விட மகளிர் ஓட்டுகள் அதிகளவில் உள்ளன. எனவே, மகளிர் ஓட்டுகளை கவரும் வகையில், தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
விடியல் பயணம் என்ற பெயரில், குறிப்பிட்ட அரசு பஸ்களில், மகளிருக்கு இலவச பயணம் அனுமதிக்கப்பட்டு உள்ளது. மாதம் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளில் படிக்கும் மாணவியருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இதன் வாயிலாக, அனைத்து தரப்பு மகளிரையும் கவர்வதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இப்பட்டியலில் விடுபட்டவர்களை வளைக்கும் வகையில், சுயஉதவி குழுக்களுக்கு அதிகளவில் கடன் வழங்க வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது.
கடந்த மூன்றாண்டு தி.மு.க., ஆட்சியில், 90 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடனுதவி வழங்கப்பட்டது. ஆட்சி காலம் முடிவதற்குள், மேலும் 90 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, மாவட்ட வாரியாக கடனுதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்ய, தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில், துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கவும், முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, மாவட்ட வாரியாக உதயநிதியின் சுற்றுப்பயண திட்டம் தயாராகி வருகிறது.