வைரலாகும் உதயநிதி ஸ்டாலின் சொன்ன குட்டி கதை..!

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் இன்று நடந்த ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இது வெறும் செயல்வீரர்கள் கூட்டம் அல்ல, மாநாட்டிற்கான முன்னோட்டம்.நம்முடைய இளைஞர் அணிக்கு பல்வேறு பெருமைகள் இருக்கிறது.இளைஞர் அணியின் வரலாற்றை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.இன்றைக்கு பல்வேறு இயக்கங்களில் இளைஞர் அணி இருக்கிறது.
ஆனால் இந்தியாவிலேயே 1980-ம் ஆண்டு முதன் முறையாக ஒரு இயக்கத்திற்கு இளைஞர் அணி என ஆரம்பித்தது தி.மு.க. தான். இதை தொடங்கி வைத்தவர் நம்முடைய கழக தலைவர் தான்.
நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக இருந்து முதலமைச்சராக இருக்கிறார் என்றால் அவருடைய உழைப்பு எப்படி பட்டது என்பதை நீங்கள் உணர வேண்டும். இளைஞரணி மன்றத்தை கோபாலபுரத்தில் தொடங்கிய நம்முடைய தலைவர் படிப்படியாக உழைத்து இன்று தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக, கழக தலைவராக உட்கார்ந்து இருக்கிறார் என்றால் அவருடைய உழைப்பு தான் அதற்கு காரணம். அதற்கு அடித்தளமாக அமைந்திருப்பது நம்முடைய இளைஞரணி என்பதை நீங்கள் உணர வேண்டும். இளைஞர் அணியினர் உழைத்தால் நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும்.
செயல்வீரர்கள்னா யார்? தலைவர் என்ன சொல்கிறாரோ, தலைமை என்ன சொல்கிறதோ அதை களத்தில் இறங்கி செஞ்சி முடிப்பவன் தான் உண்மையான செயல் வீரன். அதனால் தான் இந்த கூட்டத்திற்கு பெயர் செயல் வீரர்கள் கூட்டம். தன்னுடைய சுய நலன் பார்க்காமல் கட்சி நலனுக்காக தலைமை சொல்லிவிட்டது, தலைவர் சொல்லி விட்டார் என உத்தரவை ஏற்று களத்தில் இறங்கி அதை முதன் முதலில் செஞ்சி முடிக்கிறவன் தான் உண்மையான செயல் வீரன். இந்த மேடையில் இருக்க கூடிய உண்மையான முதல் செயல்வீரர் யார்? அது நம்முடைய முதன்மை செயலாளர் நேரு. அவருக்கு துணை நிற்பவர்கள் தான் மாவட்ட செயலாளர்கள் 3 பேரும். இங்கு இருக்கக்கூடிய அனைவரும் உண்மையான செயல் வீரர்கள். எனவே தலைமை சொல்வதை களத்தில் இறங்கி செஞ்சி முடிப்பது நம்முடைய கடமை.உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு நம்முடைய இளைஞர் அணியே சாட்சி. அதற்கு நம்முடைய தலைவரே சாட்சி.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி, பூட்டை உடைக்க சுத்தியல் பலமுறை அடித்தும் திறக்கவில்லை, சாவி எளிதாக பூட்டை திறந்தது. சுத்தியலிடம் சாவி சொன்னது நீ பூட்டின் தலையில் தட்டினாய், நான் பூட்டின் இதயத்தை தொட்டேன் என்று. இதில் பூட்டு என்பது தமிழ்நாடு. சுத்தியல் ஒன்றிய பா.ஜ.க. அரசு. மக்களின் இதயத்தை தொடும் சாவி தி.மு.க. என குட்டிக்கதை சொன்னார்.