உதயநிதி ஸ்டாலின் சொன்ன குட்டி ஸ்டோரி..! "ஒரு பூட்டு, ஒரு சுத்தியல், ஒரு சாவி"...
சென்னை, பாரிமுனையில் துறைமுகம் மற்றும் எழும்பூர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பாக முகவர்கள் பயிற்சி கூட்டமும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் இன்று நடந்தது. அதில், பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக நிர்வாகிகள் முன்பு உரையாற்றினார்.
அப்போது பேசியவர், '' நான் எப்போது சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு வந்தாலும் புது உற்சாகமும், எழுச்சியும் ஏற்படுவதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், உங்கள் ஒவ்வொருவர் முகத்திலும் இருக்கும் உற்சாகம் எனக்கும் தொற்றிக் கொண்டது. வரும் வழி எல்லாம் தாய்மார்கள் எனது கையைப் பற்றிக்கொண்டு அண்ணா, அப்பா எப்படி இருக்கிறார்? என்று ஒரு குடும்ப உறுப்பினரை விசாரிப்பது போல விசாரித்தார்கள். நம் தலைவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார், மருத்துவத்தால் மட்டுமல்ல, உங்கள் பேரன்பால் இன்னும் இரண்டு நாட்களில் பணிக்கு திரும்புவார்'' என கூறினார்.
மேலும், '' மருத்துவமனையில் இருந்து பணி செய்யும் முதல்வர் என்றால் அது நம் முதல்வர் தான் என கூறிய உதயநிதி ஸ்டாலின், பாக முகவர்கள் நீங்கள் தான் கழகத்தின் ரத்த நாளங்கள். நின்ற அனைத்து தேர்தல்களிலும் கிடைத்த வெற்றி பெருமை என்பது கலைஞர் கருணாநிதியையே சாரும் என்றும் நூறு சதவீத காரணம் உங்களை (பாக முகவர்கள்) தான் சேரும்'' என்றார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி, '' கடந்த 23 மாதங்களில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் 1 கோடியே 15 லட்சம் மகளிருக்கும் தலா ரூ. 23,000 கொடுக்கப்பட்டுள்ளது. எப்படியாவது காவிக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்க அதிமுக முயன்று வருகிறது. ஆனால் கருப்பு, சிவப்பு வேட்டி கட்டியவர்கள் இருக்கும் வரை அது நடக்காது.
இதுவரை திமுகவில் 2 கோடி பேரை உறுப்பினராக சேர்த்து உள்ளோம். நிர்வாக வசதிக்காக 8 மண்டலங்காலாக தலைவர் பிரித்திருக்கிறார். சென்னை மண்டலத்தில் 30 தொகுதிகள் உள்ளன. ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் முதல் பத்து தொகுதியில் கிழக்கு மாவட்டத்தின் 6 தொகுதியும் வந்துவிட்டது. சென்னையில் 30 தொகுதியில் கொளத்தூர் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் துறைமுகம் தொகுதி உள்ளது. அதை முதலிடத்திற்கு கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும்.
என்னுடைய சேப்பாக்கம் திருவல்லிக்கேணி 9 ஆவது இடத்தில் உள்ளது. நானும் முயற்சி செய்கிறேன், நமக்குள் போட்டி இருக்க வேண்டும். இன்னும் நாட்கள் உள்ளன. முதலில் யார் வருகிறார்கள்? என்று பார்ப்போம்'' என்றார்.
பின்னர் மேடையில் குட்டி கதை சொன்ன உதயநிதி ஸ்டாலின், '' பூட்டப்பட்ட பூட்டை திறக்க சுத்தியல் எவ்வளவோ முயற்சி செய்தது. சாவி சுலபமாக பூட்டை திறந்தது. சுத்தியல் சாவியிடம் உன்னை விட பலமாக பெரியதாக நான் இருக்கிறேன் உன்னால் எப்படி சுலபமாக திறக்க முடிந்தது என்று கேட்டது. நீ பூட்டின் தலையை ஓங்கி அடிக்கிறாய் அது பூட்டிற்கு பிடிக்கவில்லை, நான் அதன் இதயத்தை தொட்டுவிட்டேன் அதனால் தான் என்றது.
பூட்டு என்பது தமிழ்நாடு, சுத்தியல் என்பது பாஜக, சாவி நம் முதல்வர். பாஜகவால் ஒரு நாளும் தமிழர்களின் இதயத்தை தொட்டு கூட பார்க்க முடியாது. சங்கிகளும், அடிமைகளும் ஒரு நாளும் இங்கு வெல்ல முடியாது'' என பேசினார்.
.png)