விரைவில் 9 லட்சம் புதிய பயனாளர்கள் உரிமைத் தொகை - உதயநிதி ஸ்டாலின்..!
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ், தற்போது 1.15 கோடிக்கும் அதிகமான பெண்கள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று பயனடைந்து வருகின்றனர். இருப்பினும், தகுதியிருந்தும் பலரால் இந்த திட்டத்தில் சேர முடியவில்லை என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள் என பலரும் இந்த திட்டத்தில் தங்களை இணைத்து கொள்ள காத்து கொண்டு இருந்தனர்.
இந்த கோரிக்கைகளை ஏற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், விடுபட்ட பயனாளர்களை சேர்ப்பதற்காக உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டன. இந்த முகாம்கள் மூலம் பெறப்பட்ட லட்சக்கணக்கான விண்ணப்பங்கள், தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன. மகளிர் உரிமை தொகை மட்டும் இன்றி பல்வேறு அரசு அலுவலகங்கள் தொடர்பான வேலைகளும் இந்த முகாமின் பெற்று கொள்ளும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் பேசுகையில், "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், 1.15 கோடிக்கும் மேற்பட்ட மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கி, அவர்களின் பொருளாதார தன்னிறைவை உறுதி செய்து வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்கள் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் முழுமையாக பரிசீலனை செய்யப்பட்டதில், தகுதியுள்ள புதிதாக 9 லட்சம் பயனாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார். மேலும், "தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் அளித்த வாக்குறுதியின்படி, இந்த 9 லட்சம் புதிய பயனாளர்களுக்கும் விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும்" என்றும் உறுதியளித்தார்.
ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையிலும், பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "விடுபட்ட தகுதியான அனைவருக்கும் மூன்று மாதங்களுக்குள் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்" என்று தெரிவித்திருந்தார். தற்போது, அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 9 லட்சம் புதிய பயனாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளது அரசின் தொடர் நடவடிக்கையை வெளிக்காட்டுகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 9 லட்சம் குடும்பங்களின் பண்டிகை கால செலவுகளுக்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மொத்த பயனாளர்களின் எண்ணிக்கை 1.24 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.