1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் மழைநீர் ஏதும் நிற்காமல் உள்ளதே அது தான் வெள்ளை அறிக்கை - எடப்பாடிக்கு உதயநிதி ஸ்டாலின் ரிப்ளை..!

1

சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் நள்ளிரவு முதலே அதிரடி ஆய்வில் இறங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மீண்டும் நேற்று காலை முதல் இடைவிடாமல் ஒவ்வொரு பகுதியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு, மழைநீர் தேங்காமல் தடுக்கும் பணிகளை துரிதப்படுத்தினார்.

அடுத்தடுத்து ஆய்வு, மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை பார்வையிடுவது என கொட்டும் மழைக்கு மத்தியில் சுற்றிச் சுழன்று பணியாற்றினார் துணை முதல்வர் உதயநிதி. இந்நிலையில், நேற்று மாலையுடன் சென்னையில் மழை ஓய்ந்த நிலையில், தற்போது பெரும்பாலான பகுதிகளில், தேங்கியிருந்த மழைநீர் வடிந்துள்ளது.

இந்நிலையில் இன்று மழையின்போது தீவிரமாகப் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு, சேப்பாக்கத்தில் உதவிப் பொருட்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சிற்றுண்டி, உடைகள், துண்டு, பிரெட், பிஸ்கெட் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், "நேற்று முன்தினம் இரவும், நேற்று பகலிலும் மிக அதிக கனமழை பெய்தது. முதல்வரின் ஆலோசனைக்குப் பிறகு அனைத்து அதிகாரிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், எம்.பி.க்கள், கவுன்சிலர்கள் என அனைவரும் களத்தில் இறங்கி, பணியாற்றினர். இன்று மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை லேசான மழைதான் பெய்து வருகிறது.

மீண்டும் கனமழை பெய்தால், அதை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது. மழையின்போது நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள், மெட்ரோ பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறினார்.

அப்போது செய்தியாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை கோரியது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த துணை முதல்வர் உதயநிதி, "சென்னையில் தற்போது மழைநீர் எங்கும் நிற்காமல் உள்ளதே, அதுதான் வெள்ளை அறிக்கை" என பதில் அளித்தார்.


 


 

Trending News

Latest News

You May Like