ஆகஸ்ட் 19-க்குப் பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி..??
தமிழ்ப் புதல்வன் திட்ட விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், “துணை முதல்வர் உதயநிதி, இல்லை அமைச்சர் உதயநிதி, ஆக. 19-ம் தேதிக்குப் பிறகுதான் உதயநிதியை துணை முதல்வர் எனக் கூற வேண்டும்.” என்று கூறியுள்ளது வைரலாகியுள்ளது. முன்னதாக, முதல்வர் ஸ்டாலின், உதயநிதி துணை முதல்வராவது குறித்து கோரிக்கை வலுத்திருக்கிறது, ஆனால் பழுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உதயநிதி துணை முதல்வராக பதவியேற்பது குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துணை முதல்வர் பதவி தொடர்பாக உதயநிதி பேசும்போது, “நான் முதல்வருக்குத் துணையாக வரவேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பத்திரிகைகளில் இது தொடர்பான கிசுகிசுக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எங்கள் கட்சியின் அனைத்து அமைச்சர்களுமே முதல்வருக்கு துணையாகத் தான் இருக்கிறோம். அனைத்து அமைப்பாளர்களுமே முதல்வருக்குத் துணையாகத் தான் இருப்போம்” என்று முன்பாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.