இது தான் பாஜகவுக்கு விழுந்த முதல் அடி - உதயநிதி ஸ்டாலின்..!

முத்தமிழறிஞர் கலைஞரின் 5ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 1,600 தூய்மைப் பணியாளர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சென்னை மயிலாப்பூரில் உள்ள சி. என்.ஐ. தூய எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டில் எத்தனையோ மாவட்டங்களுக்கு சென்றாலும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்கு வருவது தனி சிறப்பு. சென்னை தூய்மையாக இருப்பதற்கு காரணம் எல்லாம் தூய்மை பணியாளர்கள் தான். தூய்மையான மனதை கொண்ட உங்களால் தான் தூய்மையான காற்றும், மாசற்ற சென்னையும் இன்று திகழ்கிறது.
புயல் மழை வெள்ளம் மற்றும் கொரோனா காலங்களில் நீங்கள் ஆற்றிய பணி மகத்தானது. முன்களப் பணியாளர்களுக்கு பக்கபலமாக திமுக என்றும் இருக்கும். தனிமனித மலம் அள்ளுவதை தனி சட்டம் போட்டு அகற்றிய அரசு திமுக அரசு. தூய்மை பணியாளர்களுக்கு 55 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு என இந்திய அளவில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய ஒரே அரசு திராவிட முன்னேற்ற கழக அரசு. உங்கள் குழந்தைகளுக்கென காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம் என பல்வேறு சலுகைகளை பெற்று வருகிறீர்கள். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்றால் அதற்குக் காரணம் தூய்மை பணியாளர்கள் தான்” என்றார். தொடர்ந்து முன்களப்பணியாளர்களுடன் சேர்ந்து உணவு அருந்தினார்.
பின்னர் செய்தியாளர்கள் அவரிடம் ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களவைக்கு வந்தது குறித்து கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ஏற்கனவே ஒரு நல்ல தீர்ப்பை நீதிமன்றம் அவருக்கு வழங்கியுள்ளது என்றும், நாடாளுமன்றம் செல்கிறார் என்கிற செய்தியை கேள்விபட்டேன். அவருக்கு வாழ்த்துக்கள். இது பாஜகவுக்கு விழுந்துள்ள முதல் அடி” என்று தெரிவித்தார்.