பிரதமர் மோடியின் கால் நகத்தில் இருக்கும் தூசிக்கு கூட உதயநிதி ஈடாக மாட்டார் - அண்ணாமலை..!
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கலைவாணர் அரங்கில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
”பிரதமர் மோடி தமிழ்நாட்டிலேயே தங்கி பிரச்சாரம் செய்தாலும், பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது. பிரதமர் மோடி மட்டுமல்ல அவரது தாத்தா வந்தாலும் திமுகவை தொட்டு பார்க்க முடியாது. 70 ஆண்டுகளாக திமுகவை அழிப்பேன் எனக் கூறியவர்கள் தான் அழிந்து போயிருக்கின்றனர். இரண்டு நாட்கள் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் தங்கி வாயிலேயே வடை சுட்டுள்ளார்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
இதுகுறித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது,
”அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பின்புலம் என்ன? கருணாநிதி மற்றும் ஸ்டாலின் என்ற பெயரை எடுத்துவிட்டால் உதயநிதி ஸ்டாலின் யார்?. பிரதமர் மோடியின் கால் நகத்தில் இருக்கும் தூசிக்கு கூட உதயநிதி ஸ்டாலின் ஈடாக மாட்டார். உதயநிதி அவரது தந்தையின் பணத்தில் நடித்த ஒரு தோல்வியடைந்த நடிகர். உதயநிதி அவரது தாத்தா மற்றும் அவரது தந்தையை பயன்படுத்தி தான் இன்று ஒரு அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ-வாக உள்ளார். உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியின் தாத்தாவை பற்றி பேச என்ன தகுதி உள்ளது”, இவ்வாறு அண்ணாமலை பேசினார்.