மாரி செல்வராஜை கட்டியணைத்து பாராட்டிய உதயநிதி..!
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாழை படம் வெளியானது. வாழை தோப்பு பணியாளர்களின் வேதனையை ரத்தமும் சதையுமாக திரையில் அப்படியே கொண்டு வந்திருந்தார் மாரி செல்வராஜ்.
உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, நடிகர்கள் கலையரசன். நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற விபத்து காட்சி அனைவரையும் உருக வைத்தது. விபத்து காட்சி தான் படத்தின் மையக்கரு என்பதோடு இந்த விபத்தை நேரில் கண்டு வலியை அனுபவித்தவர் மாரி செல்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
மாரி செல்வராஜின் சொந்த ஊரான புளியங்குளத்தை சேர்ந்த 15 பேரும், நாட்டார் குளத்தைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 19 பேர் இந்த விபத்தில் தங்கள் உயிர்களை பறிகொடுத்தனர்.மாரி செல்வராஜின் உடன் பிறந்த சகோதரியும் இந்த விபத்தில் உயிரிழந்தவர் என்பதோடி, மாரி செல்வராஜ் வாழைத் தோட்டத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து படம் வெளியான நிலையில் பலரும் தங்கள் உணர்வோடு இணைந்ததாக இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் வாழை படத்தை இயக்கிய மாரி செல்வராஜை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"படம் பார்த்த அனைவரையும் பசித்த சிவனணைந்தானாக்கியது வாழை! 'திரைப்படத்தின் வெற்றி' என்ற இலக்கைத் தாண்டி சமூகத்தில் 'வாழை' ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகளை சுட்டிக்காட்டி அதன் இயக்குநர் மாரி செல்வராஜ் சாரை இன்று நேரில் வாழ்த்தினோம். விளிம்பு நிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் - அவர்களின் வலிகளையும் அனுபவங்களின் வாயிலாகத் திரைமொழியில் பேசுகின்ற மாரி சாரின் கலை மென்மேலும் சிறக்கட்டும்!" என பதிவிட்டுள்ளார்.
அதற்கு நன்றி தெரிவித்துள்ள இயக்குனர் மாரி செல்வராஜ்,"வாழை திரைப்படத்தை ஓராண்டுக்கு முன்பே முதல் ஆளாய் பார்த்து பாராட்டியதோடு இன்று வாழை பெற்றிருக்கும் மாபெரும் வெற்றிக்காக என்னை நேரில் அழைத்து பாராட்டி கொண்டாடிய மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் சார் அவர்களுக்கு என் நன்றியையும் ப்ரியத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் (இன்று நீங்கள் கொடுத்த அந்த குட்டி பரிசு அவ்வளவு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது" என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வாழை திரைப்படத்தை ஓராண்டுக்கு முன்பே முதல் ஆளாய் பார்த்து பாராட்டியதோடு இன்று வாழை பெற்றிருக்கும் மாபெரும் வெற்றிக்காக என்னை நேரில் அழைத்து பாராட்டி கொண்டாடிய மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் திரு @Udhaystalin சார் அவர்களுக்கு என் நன்றியையும் ப்ரியத்தையும் தெரிவித்துக்… pic.twitter.com/rABkQ2rI8P
— Mari Selvaraj (@mari_selvaraj) September 4, 2024