ஷிஹான் ஹுசைனிக்கு ரூ.5 லட்சம் வழங்கிய உதயநிதி..!
மதுரையை சேர்ந்தவர் ஷிஹான் ஹுசைனி. கராத்தே மாஸ்டரான இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். வில்வித்தையிலும் கைதேர்ந்தவர். இவர் தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்ததால் அவர் உடல் உபாதைக்கு ஆளானார்.
இந்த வெள்ளை அணுக்கள் தான் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். ஆனால் ஷிஹான் ஹுசைனி வெள்ளையணுக்கள் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் 2 பாட்டில் ரத்தம் ஏற்றினால் தான் உயிருடன் இருக்க முடியும் என்றும் மருத்துவர்கள் கூறியதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவரிடம் வீடியோ காலில் பேசி தைரியம் கொடுத்தார். இதன் தொடர்ச்சியாக உதயநிதி ஸ்டாலின் சார்பில் ரூ.5 லட்சம் மருத்துவ உதவிக்காக வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாின் அறிவுறுத்தலின்படி வில்வித்தை பயிற்சியாளர் டாக்டர் ஷிஹான் ஹுசைனி மருத்துவ சிகிச்சை பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
ஹுசைனியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு மருத்துவு சிகிச்சை பெறுவதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது'' என்று கூறப்பட்டுள்ளது.
.png)