உதகை பெரணி இல்லம் தற்காலிகமாக மூடல்..!

சுற்றுலா பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்காவை காண அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மிதமான காலநிலையில் பூங்காவில் உள்ள பெரணி இல்லம், கண்ணாடி மாளிகை, இத்தாலியன் பூங்கா, கள்ளிச்செடி மாளிகை, கிக்யூ புல்வெளி ஆகியவற்றை பார்த்து ரசித்து செல்கின்றனர்.
குறிப்பாக 1894 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பெரணி இல்லத்தில் 1500 தொட்டிகளில் காட்சிக்கு வைக்கபட்டுள்ள 22 அரிய வகையான அரிய வகை பெரணி தாவர வகைகள் பார்க்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் பழைமையான பெரணி இல்லத்தின் மேற்கூரையில் உள்ள கண்ணாடிகள் அடிகடி உடைந்து கீழே விழுந்து வருகிறது. பகல் நேரங்களில் கண்ணாடிகள் திடீரென கீழே விழுவதால் சுற்றுலா பயணிகளுக்கு காயமும் ஏற்படும் வருகிறது.
இதனையடுத்து அந்த பெரணி இல்லத்தை சீரமைக்க பூங்கா நிர்வாகம் சார்பாக தோட்டக்கலைத்துறையிலிருந்து நிதி கேட்கப்பட்டுள்ளது. ஆனால் ஓராண்டாக நிதியானது ஒதுக்கப்படாமல் உள்ளதாலும் கூரை பகுதி மோசமாக இருப்பதாலும் முன்னெச்சரிக்கையாக பெரணி இல்லத்தை பூங்கா நிர்வாகம் இன்று முதல் மூடி உள்ளது. இதேபோல கள்ளிச்செடி மாளிகையும் மூடப்பட்டுள்ளது. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இதனையடுத்து பெரணி இல்லத்தை சீரமைக்க தோட்டக்கலைத்துறை உடனடியாக நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.