1. Home
  2. தமிழ்நாடு

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு எதிராக ‘உபா’ வழக்குப் பதிவு: வலுக்கும் எதிர்ப்பு!

1

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் கடந்த 2010ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். “காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக எப்போதும் இருந்ததில்லை. வலுக்கட்டாயமாகக் காஷ்மீர் இந்திய ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநில சுதந்திரத்திற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்” என்று பேசியிருந்தார். இந்த கூட்டத்தில். மத்திய பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஷேக் சவுகத் ஹுசைனும் கலந்துகொண்டு பேசியிருந்தார்.. இந்த பேச்சுக்கள் அப்போது சர்ச்சையான நிலையில், இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் ஷேக் சவுகத் ஹுசைன் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணை டெல்லி மெட்ரோ பொலிட்டன் கோர்ட்டில் நிலுவையிலும் இருந்து வருகிறது.

இந்நிலையில், இவர் மீது சட்ட விரோத தடுப்பு சட்டத்தின் கீழ் (UAPA) நடவடிக்கை எடுக்க டெல்லி துணைநிலை ஆளுநர் வி.ஜி. சக்சேனா அனுமதி அளித்துள்ளார். எழுத்தாளர் அருந்ததி ராய் மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், அருந்ததி ராய் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.. குற்றம் சுமத்தப்படக்கூடிய கருத்துக்களை தேர்தல் நேரத்தில் பேசிய பாஜக தலைவர்கள் மீது சட்டம் மௌனம் காப்பது ஏன்? என்று தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல, சமூக செயற்பாட்டாளர் அருந்ததி ராய் மீதான உபா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவும் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஜவாஹிருல்லா கூறும்போது, “2010-ல் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று அருந்ததி ராய் பேசியிருந்தார். 14 ஆண்டுக்கு பின் அருந்ததி ராய் மீது கொடும் சட்டத்தை பிரயோகிப்பது ஒன்றிய அரசின் காழ்ப்புணர்வை வெளிக்காட்டுகிறது. சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசியுள்ள பாஜகவினர் மீது இதுவரை சாதாரண கைது நடவடிக்கை கூட இல்லை. உபா சட்டத்தின் கீழ் 97% பேர் நீண்ட சிறைவாசத்துக்குப் பிறகும் குற்றம் நிரூபிக்கப்படாமல் உள்ளனர். உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் வகையில் உபா சட்டத்தை ஒன்றிய அரசு பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது” என தெரிவித்திருக்கிறார்.

இதுபோலவே, மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும், தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.. அதில், “அருந்ததி ராய் மீது பாயும் உபா சட்டம். தேர்தலில் பாடம் கற்றுக் கொள்ளாத பாஜக.. கருத்தைக் கண்டு அஞ்சும் கோழைகளுக்கு அடக்கு முறையே ஆயுதம். அடக்குமுறையை எதிர் கொள்ளும் கூர்மையான ஆயுதமே கருத்துரிமை. தேசம் அருந்ததிராயின் பக்கம் நின்று ஜனநாயக விரோதிகளை எதிர்கொள்ளும்” என்று காட்டமாக பதிவிட்டிருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தேசிய மாநாட்டுக் கட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உபா சட்டத்தின் கீழ் எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் டாக்டர் ஷேக் சவுகத் ஹுசைன் ஆகியோர் மீது வழக்குத் தொடர்ந்திருப்பதற்கு தேசிய மாநாட்டுக் கட்சி தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிறது. கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கும், பேசுவதை குற்றமாக்குவதற்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைப் பயன்படுத்துவது ஆழ்ந்த கவலைக்குரியது. அவர்கள் பேசியதாகக் கூறப்படும் நிகழ்வு நடந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. இடைப்பட்ட ஆண்டுகளில், அவர்கள் என்ன பேசினார்களோ அவை அனைத்தும் மறந்துவிட்டன. அவை ஜம்மு காஷ்மீரின் சூழலை பாதிக்கவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பின்னடைவை எதிர்கொண்ட போதிலும், பாஜக / மத்திய அரசாங்கத்தின் கடுமையான நிலைப்பாடு மாறாது என்பதைக் காட்டுவதற்காக அன்றி, வேறு எந்த நோக்கத்துக்கு இந்த வழக்கு உதவாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரும், பாசிசத்துக்கு எதிராக சக்திவாய்ந்த குரலாக வெளிப்பட்ட துணிச்சலான பெண்மணியுமான அருந்ததி ராய் மீது கடுமையான உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இது அடிப்படை உரிமைகளை மீறும் செயல். அதேபோல், காஷ்மீரைச் சேர்ந்த ஒரு முன்னாள் சட்டப் பேராசிரியர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது விரக்தியின் செயல்” என்று விமர்சித்துள்ளார்.

எழுத்தாளர் அருந்ததி ராய், தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருபவராவர்.. இந்நிலையில், தற்போதைய விவகாரம் பாஜகவுக்கும் எதிர்க்கட்சியினருக்குமிடையே மிகப்பெரிய வார்த்தைப் போரை ஏற்படுத்தி வருகிறது.

Trending News

Latest News

You May Like