இரு சக்கர வாகனத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்றால் 1000 ரூபாய் அபராதம்..!
குடிபோதையில் வாகனம் ஓட்டும் குற்றவாளிகளுக்கு 10,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்களுக்கு இந்த அபராத தொகை மேலும் அதிகரிக்கும். இந்த அபராத தொகை விபத்துக்களை கட்டுப்படுத்தவும், சாலையைப் பயன்படுத்துவோர் அனைவரின் உயிரைப் பாதுகாக்கவும் அரசாங்கத்தின் உறுதியை எடுத்துக்காட்டுகிறது.
வாகனம் ஓட்டும் போது மொபைல் போன்களைப் பயன்படுத்துவது பெரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த தவறுகளில் ஈடுபடுபவர்களுக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும், இதன் முந்தைய அபராதம் ரூ. 500 ஆக இருந்தது. இந்த மாற்றம் கவன சிதைவால் ஏற்படும் விபத்துகளை தடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஹெல்மெட் அணிவது, சீட் பெல்ட் அணிவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கும், சீட் பெல்ட் அணியாமல் புறக்கணிக்கும் டிரைவர்களுக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும். மேலும், அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யும் அபாயமும் ஏற்படலாம்.
ஓட்டுநர் ஆவண மீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. செல்லுபடியாகும் வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கினால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படலாம், காப்பீடு இல்லாமல் வாகனத்தை இயக்கினால் ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் இதே குற்றங்கள் நடந்தால் அபராதம் ரூ.4,000 ஆக இரட்டிப்பாகும். மேலும், செல்லுபடியாகும் மாசு சான்றிதழை வைத்திருக்கவில்லை என்றால் ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும், இது சாலை பாதுகாப்புடன் சுற்றுச்சூழல் தரத்தை பராமரிப்பதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.
இரு சக்கர வாகனத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்றால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். கவனக்குறைவாக வாகனம் ஓட்டி பிடிபட்டால் ரூபாய் 5,000 அபராதம் விதிக்கப்படும். மேலும், அவசரகால வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்வது, உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடிய கடுமையான குற்றமாகும். இதற்கு ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்படும். கூடுதலாக, சிக்னல் ஜம்பிங்கிற்கு இப்போது ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படுகிறது, அதே நேரத்தில் அதிக பாரம் ஏற்றும் வாகனங்களுக்கு ரூ. 20000 அபராதம் விதிக்கப்படும். 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ. 25000 அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதங்கள் அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகளை உறுதி செய்வதற்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.