1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் அதிகரிக்கும் டூவீலர் விபத்து… காரணம் என்ன?

Q

சாலைகளில் செல்லும்போது, சிலர் இளைஞர்கள் அதிவேகத்துடன் செல்வதையும், வளைவுகளில் வளைந்து நெளிந்து சாகசம் காட்டுவது போலப் பறப்பதையும் பல சமயங்களில் பார்த்திருப்போம். இப்படி ஓட்டுவது இவர்களுக்கு மட்டுமல்லாது, சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றன.
பல விபத்துக்கள் லாரிகள், பஸ்கள் போன்ற பிற வாகனங்களை முந்திச்செல்ல வேண்டும் என நினைப்பதால் நடக்கின்றன. இதில் லாரி ஓட்டுனர்கள் பிரேக்கை அழுத்தினால் வாகனம் நிற்பதற்கே சில நொடிகளாகும் நிலையில், அதற்குள் விபத்து நடந்து விடுகின்றன. குறிப்பாக மிக அலட்சியமாக செல்போன் பேசிக்கொண்டே இருசக்கர வாகனம் ஓட்டுகின்றனர்.
சாலை போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையிலும், விதிகளை மீறுவதால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன. அதேபோல உயிரிழப்புகளும் அதிகரிப்பது புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் மூன்று கோடியே 76 லட்சம் வாகனங்கள் உள்ளன. இவற்றில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 3 கோடியே 15 லட்சம் உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள மொத்த வாகனங்களில் 80 சதவீதத்துக்கும் மேலாக இருசக்கர வாகனங்கள் தான் உள்ளன.
இந்தச் சூழலில் தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 60,502 இரு சக்கர வாகன விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 16,172 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக 2023ம் ஆண்டில் 30,405 இருசக்கர வாகன விபத்துக்கள் நிகழ்ந்துள்ள நிலையில், இதில் 8,113 பேர் உயிரிழந்துள்ளனர். 2024ம் ஆண்டில் 30,097 இரு சக்கர வாகன விபத்துக்கள் நிகழ்ந்துள்ள நிலையில், இதில் 8,059 பேர் உயிரிழந்துள்ளதாகப் புள்ள விவரங்களில் தெரிய வந்துள்ளது.
வாகனம் ஒட்டிச் செல்வோரும், பின்னால் அமர்ந்து செல்வோரும் தலைக்கவசம் அணிவது கட்டாயம். போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே விபத்துக்கள் நிகழ முக்கியக் காரணம் என காவல்துறை உயர் அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், 18 வயதுக்கும் குறைவான சிறார்கள் வாகனங்கள் ஓட்டுவது சட்டப்படி குற்றம் எனத் தெரிந்தும், வாகனங்களை ஓட்ட பல பெற்றோர்கள் அனுமதி தருகின்றனர்.
ஓட்டுநர் உரிமம் பெறாத சிறார்கள் வாகனங்களை வேகமாக ஓட்டுவதால் அதிக விபத்துக்கள் நடக்கின்றன. அதிவேகம், குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுவது, செல்போனில் பேசியபடி ஓட்டுவது, இடது வலது புறங்களில் வாகனங்களைக் கவனிக்காமல் திருப்புவது உள்ளிட்ட காரணங்களினால் விபத்துக்கள் நிகழ்வதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
குறிப்பாக 50 சதவீத இருசக்கர வாகனங்களில் பக்கவாட்டு கண்ணாடிகள் இல்லை. இதனால் பின்னால் வரும் வாகனங்களைக் கவனிக்க முடியாமல் விபத்துக்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
சாலை நடுவே செல்வது, திடீரென பிரேக் பிடிப்பது, எதிர் திசையில் வாகனம் ஓட்டுவது போன்றவையும் விபத்துக்குக் காரணமாகின்றன. இருசக்கர வாகனத்தை 95 சதவீதம் பேர் முறையாகப் பராமரிப்பதில்லை என்பதும் விபத்துக்கள் நிகழக் காரணமாக அமைகிறது காவல்துறையினர் சுட்டிகாட்டுகின்றனர்.
போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பதும், வாகன ஓட்டிகள் விழிப்புணர்வுடன் செயல்படுவதால் மட்டுமே விபத்துக்களை தடுக்க முடியும் என்பதே போக்குவரத்து காவலர்களின் அறிவுறுத்தலாக உள்ளது.

Trending News

Latest News

You May Like