தக்காளியை பாதுகாக்க மின்வேலி… இரண்டு பேர் பலி!

கர்நாடகாவில் தக்காளியை பாதுகாக்க அமைக்கப்பட்ட மின்வேலியை தொட்ட ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மின்வேலி அமைத்த நபர் உயிரிழந்த நபரின் உறவினர்களால் கொலை செய்யப்பட்டார்.
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சரக்கமதேனஹள்ளி கிராமத்தை சேர்ந்த அஸ்வத்ராவ் (55) அவரது விவசாய தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த தக்காளியை யாரும் பறித்து சென்று விடக்கூடாது என்பதற்காக தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்து இருந்தார்.
இந்நிலையில் வசந்த குமார்(31) என்பவர் தக்காளி தோட்டத்தில் தக்காளியை திருட சென்று உள்ளார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார். அவரது உடலை போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அஸ்வத்ராவ் தனது நிலத்தின் அருகே நின்றார். அப்போது அங்கு வந்த வசந்தகுமாரின் குடும்பத்தினர், வசந்தகுமார் சாவுக்கு நீ தான் காரணம் என்று கூறி அஸ்வத்ராவ் கம்பி, கட்டையால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்ததும் போலீசார் அஸ்வத்ராவின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விசாரணையில் தக்காளியை பாதுகாக்க போடப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி வசந்தகுமார் இறந்ததால், அஸ்வத்ராவை வசந்தகுமாரின் குடும்பத்தினர் கொலை செய்தது தெரியவந்தது. போலீஸார் கொலையாளிகளை தேடிவருகின்றனர்.
newstm.in