இரண்டரை கோடி பக்தர்கள் புனித நீராடினர்..!

பிரயாஜ்ராஜில், மஹா கும்ப மேளா நடந்து வருகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மஹா கும்ப மேளா என்பதால் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து குவிகின்றனர்.
முதல் நாளான நேற்று முன்தினம் ஒன்றரை கோடி பக்தர்கள் புனித நீராடினர். இன்று இரண்டாம் நாள் மாலையில் கணக்குப்படி இரண்டரை கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். இந்த தகவலை உ.பி., மாநில நகர்ப்புற மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர் அம்ரித் அபிஜித் தெரிவித்தார்.
மாநில டி.ஜி.பி., பிரசாந்த் குமார் கூறுகையில், ''பக்தர்கள் கூட்டம், வருகையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இன்று முக்கிய நிகழ்வான அம்ரித் ஸ்நானம் என்பதால் சாதுக்கள் பலர் புனித நீராடினர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பகல் 12 மணிக்குள் 1.60 கோடி பக்தர்கள் நீராடி விட்டனர்,'' என்றார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ''மகாகும்பத்தில் பக்தி மற்றும் ஆன்மீகத்தின் தெய்வீக சங்கமம். மகர சங்கராந்தியின் புனிதமான தருணத்தில் மஹாகும்பத்தின் முதல் அமிர்த ஸ்னானில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களுக்கும் வாழ்த்துக்கள்,'' என்று கூறி, படங்களை வெளியிட்டுள்ளார்