அஜித்குமார் இல்லத்திற்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல்..!

திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வந்த பக்தரின் நகை திருட்டு போனது தொடர்பாக அக்கோயிலில் தற்காலிக காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் (28) என்ற இளைஞரை விசரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். கடந்த ஜூன் 28 சனிக்கிழமை காவல்துறையின் தனிப்படை அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இச்சூழலில் விசாரணைக்காக அழைத்து செய்யப்பட்ட அஜித்குமார் உயிரிழந்தார். அவரை போலீசார் கடுமையாக தாக்கி உள்ளனர். இச்சம்வவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில் 6 காவலர்கள் பணியிடை நீக்கமும். 5 போலீசார் அதிரடியாக கைதும் செய்யப்பட்டிருக்கின்றனர். கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு இலவச வீட்டுமனையும், அவரின் சகோதரருக்கு அரசுப் பணியும் வழங்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் Justice For Ajithkumar என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டு செய்தனர்.
எதிர்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினர்கள் லாக்கப் மரணத்தை எதிர்த்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாஜக, அதிமுக தரப்பில் இருந்து ஆளும்கட்சியான திமுக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பல கேள்விகளை எழுப்பி உள்ளனர். இந்த விவகாரத்தில் அமைதியாக இருந்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், நேற்று மாலை அஜித்குமாரின் தாயார் மற்றும் சகோதரனிடம் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதலை தெரிவித்தார். அமைச்சர் பெரிய கருப்பன் அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இன்று (ஜூலை 02) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.
இந்த நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், அஜித்குமாரின் தாயாரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் அஜித்குமாரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கியதோடு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் அஜித்குமார் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.