இன்று மாநாடு தேதியை அறிவிக்கிறார் தவெக தலைவர் விஜய் : விஜயகாந்த் பிறந்தநாளில் நடத்த முடியாதாம்..!
2026 சட்டப்பேரவை தேர்தலே தங்கள் இலக்கு என தவெக தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார். தவெக அதன் முதல் மாநில மாநாட்டை கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் விழுப்புரத்தில் பிரம்மாண்ட முறையில் நடந்தியது. அதன்பின், வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பாரபத்தி பகுதியில் 2வது மாநில மாநாடு நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார்.
மதுரை மாநாட்டிற்காக கடந்த 16ஆம் தேதி காலை 7 மணிக்கு கட்சி பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் பூமி பூஜை செய்யப்பட்டு பந்தக்கால் நடப்பட்டது. ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரை மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதையொட்டி, விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாப்பட இருப்பதால் மாநாட்டு தேதியை மாற்ற போலீசார் தரப்பில் இருந்து தவெகவிடம் தெரிவிக்கப்பட்டது.
இதையொட்டி, மதுரை மாநாடு குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து மாநாட்டுக்கு அனுமதி கோருவது குறித்தும், மாநாடு தேதி குறித்தும் தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு இரண்டாவது முறையாக வந்தார்.
அரைமணி நேரத்திற்கும் மேலாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தை நேரில் சந்தித்து பேசிய பின்னர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை உள்ளதால் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில் சிக்கல் என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக மாநாட்டை ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதியில் ஏதேனும் ஒரு தேதியை தேர்வு செய்து கொள்ளவும் என காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். அதில் ஒரு தேதியை தேர்வு செய்து காவல்துறையிடம் கொடுத்துள்ளோம். மாநாடு எப்போது நடைபெறும் என்பதை தவெக தலைவர் விஜய் இன்று (ஆக. 5) அறிவிப்பார்" என்றார்.
தவெக அதன் 2வது மாநில மாநாட்டை விஜயகாந்த் பிறந்த இடத்திலும், விஜயகாந்த் பிறந்த நாளிலும் நடத்தவே திட்டமிட்டது என கூறப்பட்டு வந்தது. ஆக. 25ஆம் தேதி திங்கட்கிழமையாக இருந்தாலும் விஜயகாந்த் பிறந்தநாள் என்ற காரணத்திற்காகவே விஜய் ஆக. 25ஆம் தேதியை தேர்வு செய்ததாக தகவல்கள் வலம் வந்தன. காரணம், விஜயகாந்தின் அரசியல் வாரிசாக விஜய் தன்னை மறைமுகமாக அறிவித்துக்கொள்ள விரும்புகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது இந்த தேதியை மாற்ற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. ஆக. 21ஆம் தேதி அன்று மாநாடு நடைபெற அதிக வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.