தவெக தலைவர் விஜய் - பிரஷாந்த் கிஷோரின் 2.30 மணி நேர ஆலோசனை நிறைவு..!

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் களத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது தமிழக அரசியல்.
200 தொகுதிகள் இலக்கு என்று தி.மு.க., தேர்தல் வேலைகளை தொடங்கி உள்ளது. வலுவான கூட்டணியை உரிய நேரத்தில் அறிவிப்போம் என்று அ.தி.மு.க., கூறி வருகிறது.
2026 தேர்தல் களத்தில் புதிய கட்சியாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகமும் பங்கேற்கிறது. அதற்கான முஸ்தீபுகளை முன்பே தொடங்கிவிட்ட நடிகர் விஜய், தற்போது ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து வருகிறார். அண்மையில் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிட்டோருக்கு முக்கிய பொறுப்புகளையும் அளித்தார்.
அதே நேரத்தில் அ.தி.மு.க., கூட்டணிக்குள் த.வெ.க.,வை கொண்டு வரவேண்டும் என்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இந் நிலையில், நடிகர் விஜய்யுடன் பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் திடீர் சந்திப்பு நிகழ்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நீலாங்கரையில் உள்ள விஜய் இல்லத்தில் இந்த முக்கிய சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
சந்திப்பை கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஏற்பாடு செய்ததாகவும், சந்திப்பின் போது அவர் உடன் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் குறித்தும் இருதரப்பு பேசியதாகவும், கூட்டணி மற்றும் தேர்தல் செயல்திட்டம் குறித்து ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த முக்கிய சந்திப்பின்போது, த.வெ.க., அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும் கலந்து கொண்டுள்ளார் என்றும் தெரிகிறது. தேர்தலுக்கு ஓராண்டு உள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் தவெக தலைவர் விஜய் உடன் அரசியல் வியூக அமைப்பாளர் பிரஷாந்த் கிஷோர் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றுள்ளது
சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற சந்திப்பில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தவெகவின் அரசியல் வியூகங்களை மக்கள் மத்தியில் எடுத்து செல்ல ஒப்பந்தம் கையெழுத்து என தகவல்.
அதிமுகவின் தேர்தல் வியூகப் பணிகளை பிரசாந்த் கிஷோர் தலைமையிலான நிறுவனம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் விஜய்யுடன் சந்திப்பு நடைபெற்று இருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.