ட்விட்டரின் பெயர் லோகோ மாற்றம் ?

எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். அந்நிறுவனத்தின் சிஇஓ-வாக பொறுப்பேற்ற அவர், அதிரடியான மாற்றங்களை ட்விட்டரில் கொண்டு வந்தார். பணியாளர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்தார். பணி நடைமுறைகள் சார்ந்து புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தார்.
பயனாளர்கள் தங்கள் ட்விட்டர் கணக்குகளை அதிகாரப்பூர்வமானதாக மாற்றுவதற்குக் கட்டணம் உட்பட புதிய மாற்றங்களை அவர் அறிவித்தார்.
இந்நிலையில் மீண்டும் ட்விட்டர் நிறுவனத்தின் லோகோவை மாற்ற முடிவு செய்திருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட எலான் மஸ்க், ட்விட்டர் லோகோவை மாற்ற உள்ளதாகவும், ட்விட்டர் செயலியில் ஏற்கனவே இருக்கும் லோகோவிற்குப் பதில் எந்த மாதிரியான லோகோவை வைக்கலாம் என்றும் பயனர்களிடமே கருத்துகளைக் கேட்டிருக்கிறார்.
அடுத்த ட்வீட்டாக, "ஒரு நல்ல X லோகோ இன்று இரவுக்குள் நீங்கள் பகிர்ந்தால், அதை நாளையே உலகம் முழுவதும் லைவ் செய்துவிடுவோம்" என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டுக்குப் பலரும் தங்களின் லோகோ படைப்புகளை ரிப்ளையாகப் பதிவிட்டு வருகின்றனர்.
— Elon Musk (@elonmusk) July 23, 2023
இதைத் தொடர்ந்து 'X' என்பது மட்டும் ஒளிரும் சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் பலரும் ட்விட்டரின் பெயரும் லோகோவும் நிச்சயம் மாற்றப்படும் என்று தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் வணிகப் பெயரை 'X Corp' என்று மாற்றிவிட்டது குறிப்பிடத்தக்கது.