'டுவிட்டர்' சின்னம் ரூ.30 லட்சத்துக்கு ஏலம்..!

பிரபல சமூக வலைதளமான டுவிட்டர், 2006ல் ஜாக் டோர்சி, நோவா கிளாஸ், பிஸ் ஸ்டோன் மற்றும் இவான் வில்லியம்ஸ் ஆகியோரால் துவங்கப்பட்டது. அப்போது, நிறுவனத்தின் லோகோ எனப்படும் சின்னமாக பறவையை தேர்ந்தெடுத்தனர்.
அதன்பின், 2012ல் லோகோ மேலும் நவீனமயமாக்கப்பட்டு, ஒற்றை நீல பறவையாக மாற்றப்பட்டது. எலான் மஸ்க், 2023ல் டுவிட்டரை கையகப்படுத்தி 'எக்ஸ்' என மறுபெயரிட்டபோது, இந்த லோகோ பயன்பாடு நிறுத்தப்பட்டது.
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள டுவிட்டரின் தலைமையக கட்டடத்தில் இருந்த பறவை லோகோ அப்புறப்படுத்தப்பட்டு, அங்கு 'எக்ஸ்' லோகோ நிறுவப்பட்டது.
இந்நிலையில், அரிய பொருட்களை ஏலம் விடும் ஆர்.ஆர்., ஏல நிறுவனம், 254 கிலோ எடை, 12 அடி நீளம், 9 அடி அகலம் கொண்ட டுவிட்டர் பறவை சின்ன போர்டு, 30 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக அறிவித்துள்ளது. ஆனால், இதை ஏலம் எடுத்தவர் பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை.
அதே போல் மறைந்த ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ., ஸ்டீவ் ஜாப்ஸ் கையொப்பமிட்ட, 1976ம் ஆண்டு காசோலை 96.4 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக கூறினர்.