பிறந்தது இரட்டையர்கள் - ஒரு குழந்தை 2021 ஆம் ஆண்டில் மற்றுமொரு குழந்தை 2022 ஆம் ஆண்டில்..!!

அமெரிக்காவில் இரட்டைக் குழந்தைகள் 15 நிமிட இடைவெளியில் வெவ்வேறு ஆண்டில் பிறந்துள்ளன.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் கிரீன்ஃபீல்டு நகரில் வசிக்கும் ராபர்ட் ட்ரூஜில்லோ - பாத்திமா மேட்ரிகல் தம்பதிக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்த பாத்திமா, டிசம்பர் 31ஆம் தேதி பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 2021 டிசம்பர் 31 நள்ளிரவு 11:45 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அடுத்த 15 நிமிடங்களில் 2022 ஜனவரி 1ஆம் தேதி நள்ளிரவு பெண் குழந்தை பிறந்தது. இது மிகவும் அரிதான ஒரு நிகழ்வு. இதனையடுத்து பாத்திமா மருத்துவர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
இரட்டைக் குழந்தைகள் பிறந்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது, இருவருக்கும் வெவ்வேறு ஆண்டில் பிறந்த நாள் என்பது ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என அவர் கூறியுள்ளார்.
ஆண் குழந்தைக்கு ஆல்பிரெடோ ஆண்டோனியோ என்றும், பெண் குழந்தைக்கு அய்லின் யோலாண்டா என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.
newstm.in