த.வெ.க. நிர்வாகிகளுக்கு அக்.14 வரை நீதிமன்ற காவல்..!
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன் மற்றும் சிலர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அவர்கள் மீது 5 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கை கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
கடந்த சனிக்கிழமை விஜய் நாமக்கல்-சேலம் சாலை சந்திப்பு பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான த.வெ.க. தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டனர். அப்போது அங்குள்ள தனியார் பல் ஆஸ்பத்திரியின் பெயர் பலகை மீது சிலர் ஏறி நின்றதால் அது இடிந்து விழுந்தது. இதில் ஆஸ்பத்திரியின் கண்ணாடி சுவர், கண்காணிப்பு கேமரா போன்றவை சேதம் அடைந்தன. இதுகுறித்து ஆஸ்பத்திரியின் மேலாளர் அரிச்சந்திரன் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், த.வெ.க. மாவட்ட செயலாளருமான சதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்கள் மீது விஜய் வருகையையொட்டி அனுமதிக்கப்படாத இடங்களில் சுவரொட்டி ஒட்டுதல், போக்குவரத்துக்கும், பொது அமைதிக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் பேனர்களை வைத்தல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கியது உள்பட 6 வழக்குகள் தனித்தனியாக போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் புஸ்சி ஆனந்த், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட த.வெ.க. நிர்வாகிகளை கைது செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த தனிப்படை போலீசார், அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இதில் மதியழகன் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான தனிப்படையினர் அங்கு சென்று, நேற்று முன்தினம் இரவு மதியழகனை கைது செய்தனர்.
இந்நிலையில் கரூர் சம்பவத்தில் கைதான த.வெ.க. மாவட்ட செயலாளர் மதியழகன், மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் இருவருக்கும் அக். 14-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கரூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி கரூர் துயரச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட த.வெ.க. நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகிய இருவரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றக் காவலை அடுத்து த.வெ.க. நிர்வாகிகள் இருவரும் திருச்சி சிறையில் அடைக்கப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.