தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சுகாதாரத்துறையை மீட்க வேண்டும் : டிடிவி தினகரன்..!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, கேள்விக்குறியாகும் நோயாளிகளின் பாதுகாப்பு, சிகிச்சை அளிப்பதில் அலட்சியப் போக்கு என பல்வேறு நோய்களால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கும் சுகாதாரத்துறையை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட காயத்துடன் வந்த 4 வயது சிறுவனுக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில் செக்யூரிட்டிகளே சிகிச்சை அளித்ததாக செய்தி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வந்த உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த திண்பண்டங்களை எலி சாப்பிடுவது போல் வெளியாகியிருக்கும் வீடியோ கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மக்கள் நலனில் அக்கறையில்லாத திமுக அரசின் அலட்சியப் போக்கால் சுகாதாரத் துறையின் மீது எழும் தொடர் புகார்கள் அரசு மருத்துவமனைகளை மட்டுமே நம்பி சிகிச்சைக்காக வரும் ஏழை, எளிய பொதுமக்களுக்கு மிகுந்த அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சீர்குலைந்திருக்கும் தமிழக சுகாதாரத்துறையை மீட்க நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய தொடங்கியிருக்கும் சூழலில் மழைக்கால நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் கையிருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.