புதிய திருப்பம் : விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும்: டி.டி.வி.தினகரன்..!
த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும். எந்தகட்சிகள் அந்த கூட்டணியில் இடம் பெறும் என்பது விரைவில் தெரியும். தேர்தல் நெருக்கத்தில் எதிர்பாராத கூட்டணிகள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். டிடிவி தினகரன் மேலும் கூறுகையில், தி.மு.க., என்.டி.ஏ, விஜய் கூட்டணி, சீமான் என 4 முனை போட்டி இருக்கும். அதே நேரத்தில் விஜய் கூட்டணியை ஏற்க எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறாரோ என்று சந்தேகம் உள்ளது” என்று கூறினார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது. இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிட்டது. தி.மு.க. கூட்டணி கடந்த சில தேர்தல்களை போலவே இந்தத் தேர்தலிலும் தொடர்கிறது. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் பெரியளவுக்கு அரசியல் கட்சிகள் இல்லை. தி.மு.க.விடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற அ.தி.மு.க. - பா.ஜ.க. தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முன்பு வரை த.வெ.க. தலைவர் விஜய் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய 3 கட்சிகளையும் விமர்சித்து வந்தார். கரூர் சம்பவத்தில் த.வெ.க.விற்கு ஆதரவாக அ.தி.மு.க., பா.ஜ.க. பேசி வருகிறது. இதனால், அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் நிலையில் டிடிவி தினகரன் மேற்கண்டவாறு பேசியுள்ளார்.