சத்தியம் வெல்லும்; நாளை நமதே: விஜயகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவு..!

தே.மு.தி.க. வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவதாக யாரும் கூறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்த நிலையில், இவ்வாறு பதிவிடப்பட்டிருந்தது. மேலும், டி.எம்.டி.கே. பார் டி.என் என்ற ஹேஷ்டேக்கும் பயன்படுத்தப்பட்டிருந்தது.
கடந்த மக்களவைத் தேர்தல் கூட்டணியின்போது தே.மு.தி.க. வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாகக் கூறப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''கூட்டணி குறித்த பேச்சையெல்லாம் விட்டுவிடுங்கள், தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்காதீர்கள், நாங்கள் ஏதாவது கூறினோமோ? யார் யார் சொல்வதெல்லாம் எங்களிடம் கேட்காதீர்கள். நாங்கள் ஏதாவது வெளிப்படுத்தினோமா?'' என பதிலளித்திருந்தார்.
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. வுக்கு ஏற்கெனவே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் விரைவில் பெயர் அறிவிக்கப்படும் என்றும் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்னதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.