அமெரிக்காவை அச்சுறுத்தும் சீனாவின் Deepseek – டிரம்ப்பே அரண்டு போயிட்டார்!

சீனா உருவாக்கியுள்ள Deepseek ஏஐ பற்றி எச்சரித்த டிரம்ப்… சீனா நாம் உருவாக்கிய அதே ஏஐ போன்ற மாடலை நம்மைவிடக் குறைந்த செலவில் உருவாக்கி உள்ளது.
நம்முடையதை போலவே ரிசல்ட் கொடுக்கிறது அப்படி என்றால் நம்மாலும் அதே விலைக்கு உருவாக்க முடியும் என்று காட்ட வேண்டும்.
இது ஒரு வகையில் நல்லதுதான். இப்போதும் ஏஐ உலகில் நாம்தான் நம்பர் 1 என்பதை மறக்க வேண்டாம். தொடர்ந்து இதில் மாற்றங்களை நாம் செய்ய வேண்டும்.
புதிய முயற்சிகளை எடுக்க வேண்டும். சீனா இதில் நுழைந்துவிட்டது. இதில் நடக்கும் விஷயங்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.
மார்க்கெட் காலி:
சீனா உருவாக்கியுள்ள DeepSeek ஏஐ உலகையே புரட்டிப் போட்டுள்ளது. முக்கியமாக அமெரிக்காவை தண்ணி குடிக்க வைத்துள்ளது சீனாவின் இந்த DeepSeek ஏஐ மாடல்.
இதனால் நேற்று Nvidia மார்க்கெட் 600 பில்லியன் டாலரை இழந்தது. அமெரிக்க வரலாற்றில் இது மிகப்பெரிய சரிவு ஆகும். அதேபோல் மைக்ரோசாப்ட், ஆப்பிள், டெஸ்லா என்று அமெரிக்காவின் எல்லா துறைகளும் நேற்று சரிந்தது. சீனா மிக எளிதாகச் சில வருடங்களில் உருவாக்கிய இந்த ஏஐ அமெரிக்க ஏஐ உலகை காலி செய்துள்ளது.
என்ன ஏஐ:
இப்போது ஓபன் ஏஐ நிறுவனத்தின் இந்தச் சாட் ஜிபிடிக்கு போட்டியாகச் சீனாவின் DeepSeek ஏஐ மாடல் வந்துள்ளது. டீப்சீக் என்பது தென்கிழக்கு சீனாவில் உள்ள ஹாங்சூ நகரில் நிறுவப்பட்ட ஒரு சீன செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஆகும்.
சீன நிறுவனமான டீப்சீக்கின் AI சாட்போட், அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானதைத் தொடர்ந்து, ஆப்பிள் ஸ்டோரில் மிக அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட இலவச செயலியாக மாறியுள்ளது. அதாவது சாட் ஜிபிடியை இது பின்னுக்கு தள்ளி உள்ளது.
சீன வல்லுனர்கள் இதை உருவாக்க $6m (£4.8m) மட்டுமே எடுத்ததாகக் கூறியுள்ளனர், இது அமெரிக்காவில் AI நிறுவனங்கள் செலவழித்த பில்லியன்களை விட மிகக் குறைவு. உதாரணமாக ஓபன் ஏஐ சாட் ஜிபிடியை உருவாக்க 10 பில்லியன் டாலர் வரை எடுத்துக்கொண்டது.
டீப்சீக்கின் நிறுவனர் லியாங் வென்ஃபெங் யார்?
டீப்சீக்கின் நிறுவனர் லியாங் வென்ஃபெங் ஹெட்ஜ் பண்ட் நிதியிலிருந்து வந்த பணத்தைப் பயன்படுத்தி டீப்சீக்கை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.
40 வயதான தகவல் மற்றும் மின்னணு பொறியியல் பட்டதாரி ஆவார் இவர். Nvidia A100 ஐ இவர்கள் பயன்படுத்தவில்லை என்று கூறினாலும். அமெரிக்காவின் இந்தச் சிப்பை ரகசியமாகப் பயன்படுத்தியே இதைச் செயல்பாட்டிற்கு கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சிப்பை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா சார்பாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேகம் எடுக்கும் ஏஐ:
உலகம் முழுக்க தற்போது ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் எனப்படும் ஏஐ ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. நாம் தினசரி பயன்படுத்தும் ஒவ்வொரு சேவைகளிலும் ஏஐ பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிலும் கடந்த சில மாதங்களில் ஏஐ இன்னும் வேகமாக வளரத் தொடங்கிவிட்டது. உதாரணமாக உலகம் முழுக்க சாட் ஜிபிடி தற்போது பெரிய அளவில் கவனம் பெற்று வருகிறது.
ஏஐ தொழில்நுட்பம் கொண்ட தேடுபொறி நிறுவனமான இது நாம் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளிக்கும். அதோடு ஏற்கனவே அளிக்கப்படும் பதில்களை வைத்து… அது தன்னை தானே மெருகேற்றிக்கொள்ளும்.
கூகுள் போல் அல்காரிதம் அடிப்படையில் இதை ஏமாற்ற முடியாது. மாறாக இது மெய்நிகர் சிந்திக்கும் திறன் கொண்டது. அதாவது குறிப்பிட்ட எல்லைவரை சுயமாகச் சிந்தித்து இது பதில்களை வழங்கும்.
உலகம் முழுக்க உச்சத்தில் இருக்கும் ஏஐ தொழில்நுட்பத்தின் புதிய பாய்ச்சலாக இந்தச் சாட் ஜிபிடி பார்க்கப்படுகிறது.