அமெரிக்கா வரும் பிரதமர் மோடியை சந்திக்க விரும்பும் டிரம்ப்!
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் ‘குவாட்’ அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் டெல்வாரே நகரில் நடக்கிறது. ஜோ பைடன் தலைமையில் நடக்கும் இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 21ம் தேதி அமெரிக்கா செல்கிறார். அடுத்த நாள், நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் மோடி உரையாற்ற உள்ளார்.
செப்.,23ல், ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கும் கூட்டத்தில் பேசும் மோடி, பல்வேறு நாட்டு தலைவர்களையும் சந்திக்கிறார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்ப், மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். மிக்சிகனில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட டிரம்ப், ‘அடுத்த வாரம் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளேன். பிரதமர் மோடி அற்புதமானவர்’ எனப் பேசினார். இரு தலைவர்களும் எங்குச் சந்தித்துப் பேசுவார்கள் என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.
அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளியினர் ஓட்டுக்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. எதிர் தரப்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு அதிகப்படியான ஓட்டுக்கள் கிடைக்க வாய்ப்பள்ளது. அதைத் தடுக்கும் வகையில், மோடியுடன் ஒரு சந்திப்பு நடத்தி, தானே இந்தியர்களுக்கு நெருக்கமானவர் என்று காட்டிக்கொள்ள டிரம்ப் திட்டமிடுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.