பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்களையே அமைச்சரவையில் தேர்வு செய்யும் டிரம்ப்..??
அமெரிக்க அதிபராக டிரம்ப் 2வது முறையாகப் பதவியேற்க இருக்கிறார். டிரம்ப் அடுத்தாண்டு தொடக்கத்தில் அதிபராகப் பதவியேற்கும் நிலையில், தனது அமைச்சரவையைத் தேர்வு செய்து வருகிறார்.
இதற்கிடையே முக்கிய பதவிகளுக்கு டிரம்ப் தேர்வு செய்துள்ள நியமனங்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் தூக்கத்தையே கெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் உளவுத் துறையான சிஐஏ தலைவர் ஆகிய பதவிகளுக்கு டிரம்பின் தேர்வைப் பார்த்து பாகிஸ்தானை மிரண்டு போய் இருக்கிறது.
அமெரிக்க வெளியுறவு துறைக்குத் தலைமையேற்க மார்கோ ரூபியோவை டிரம்ப் தேர்வு செய்துள்ளார். இவர் பொதுவாகவே இந்தியா ஆதரவு நிலைப்பாடு கொண்டவர் ஆவார். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் கருத்துக்களை முழுமையாக அங்கீகரிக்கும் மசோதாவை கூட அவர் தங்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் நேரடியாகவே ஆதரிப்பதாகவும் இதனால் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எந்தவொரு உதவியையும் வழங்கக் கூடாது என்று மார்கோ ரூபியோ தனது மசோதாவில் கூறியிருந்தார்.
மேலும், சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கைச் சமாளிக்க இந்தியாவுடன் நீண்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு தேவை என்றும் ஜப்பான், இஸ்ரேலை ஆகிய நட்பு நாடுகளுக்கு இணையாக இந்தியாவுடன் தொழில்நுட்ப பரிமாற்றத்தைச் செய்ய வேண்டும் என்றும் மார்கோ ரூபியோ மசோதாவில் கூறப்பட்டு இருந்தது. இவரை வெளியுறவுத் துறைக்கு டிரம்ப் தேர்வு செய்துள்ளது பாகிஸ்தானுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.