டிரம்ப் ஆபர்! கனடா அமெரிக்காவுடன் இணைந்தால் கட்டணங்கள் இருக்காது வரிகள் குறையும்..!
கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கும் முயற்சியை மீண்டும் மேற்கொண்டு உள்ளாராம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். கனடாவில் அரசியல் சிக்கல் நிலவி வரும் நிலையில் டிரம்ப் மீண்டும் இந்த முயற்சியில் இறங்கி உள்ளாராம்.
பிரதமர் ட்ரூடோவின் ராஜினாமாவைத் தொடர்ந்து அமெரிக்காவின் 51வது மாநிலமாகக் கனடாவும் இணைய வேண்டும் என்று அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
கனடா அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறுவதை நான் உட்பட பலரும் விரும்புகிறார்கள். கனடா அமெரிக்காவின் தயவில்தான் இருக்கிறது. நாம் அவர்களுக்கு நிதி உதவி கொடுக்கிறோம். நிறைய சலுகைகள் கொடுக்கிறோம். ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்பு தருகிறோம். இனி அப்படி எல்லாம் வழங்க முடியாது.
கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், கட்டணங்கள் இருக்காது, வரிகள் குறையும், மேலும் ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்களின் அச்சுறுத்தலிலிருந்து கனடா முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். கனடாவிற்கு ஒரு ஆபர் தருகிறேன்… அவர்களின் டாலர் மதிப்பை அப்படியே அமெரிக்க டாலர் மதிப்பிற்கு மாற்றலாம். அதேபோல் அவர்களின் ஹெல்த்கேர் சிஸ்டம் அப்படியே தொடரலாம்.
இதனால் கனடாவிற்கு நஷ்டம் ஏற்படுவது தடுக்கப்படும். கனடா இந்த டீலிங்கை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று, அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
டிரம்ப் திட்டம்:
அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்ப் 3 முக்கியமான நாடுகளை அல்லது வேறு நாட்டின் பகுதிகளைத் தனது நாட்டுடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அளிக்கும் பேட்டிகள் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளன.
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்தில், பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும். அதோடு கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்து இரண்டும் அமெரிக்காவுடன் இருக்க வேண்டிய பகுதிகள். இந்தப் பகுதிகளை அமெரிக்காவிற்கு கொண்டு வர வேண்டும்.
பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்து பகுதிகளை நான் அதிபர் ஆனதும் அமெரிக்காவுடன் இணைக்கப் பணிகளைச் செய்வேன் என்று கூறி உள்ளார். கனடா பற்றிப் பேசிய டிரம்ப், ஒவ்வொரு வருடமும் நாங்கள் ஏன் 10 கோடி டாலருக்கு கனடாவிற்கு உதவ வேண்டும். அவர்கள் வறுமையை நோக்கிச் செல்கிறார்கள். கனடாவிடம் சொந்த நாட்டு பாதுகாப்பிற்கு பணம் இல்லை.
இது எல்லாம் சரியாக ஒரு வழி இருக்கிறது. கனடா அமெரிக்காவின் ஒரு அங்கம் ஆகலாம். 50 மாகாணங்கள் உள்ளன. இதில் 51வது மாகாணமாகக் கனடா மாறலாம். அவர்களுக்குப் பாதுகாப்பு செலவு இருக்காது. மற்ற செலவுகளும் குறையும். அதோடு வேகமாக வளரவும் முடியும் என்று கூறி இருந்தார்.
கனடாவை அமெரிக்காவுடன் ஒருங்கிணைப்பது நல்ல யோசனையாக இருக்கும் என்று தான் கருதுவதாகக் கூறினார்.
கனடாவில் அரசியல் சிக்கல்:
கனடாவில் அரசியல் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அங்கே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகி உள்ளார். உட்கட்சி பிரச்சனை, மசோதாக்களை நிறைவேற்ற முடியாதது, சில நிதி பிரச்சனைகள் காரணமாக ஜஸ்டின் பதவி விலகி உள்ளார்.
ஏற்கனவே நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் திடீரென ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அங்கே நிதி நிர்வாகம் தொடங்கி கடன் பிரச்சனைவரை பல விஷயங்கள் தீவிரம் அடைந்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஜஸ்டின் ராஜினாமா செய்துள்ளார்.