மீண்டும் அமெரிக்க அதிபரானார் டிரம்ப்..! தங்கம் விலை மேலும் உயருமா?
2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று, முதலீட்டாளர்கள் கண்கொத்திப் பாம்பாகப் பார்த்துக்கொண்டிருந்த நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகளில் கடும் சரிவு காணப்பட்ட நிலையில், மற்றொரு பக்கம் தங்கம் விலையும் கடுமையாக உயர்ந்து வந்தது.
உலகளவில் நடைபெற்று வரும் பல்வேறு காரணங்களால், கடந்துகொண்டிருக்கும் இந்த ஆண்டில் மட்டும், தங்கம் விலை கிட்டத்தட்ட 40 சதவீதம் விலை உயர்வைக் கண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவில், அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்து நடக்கப்போவது என்ன என்பதை அறிய பலரும் ஆவலுடன் இருக்கிறார்கள்.
இது பற்றி பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தங்கம் அதன் பளபளப்பை சற்று இழக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பல்வேறு உலக நாடுகளிலும் பங்குச் சந்தைகள் பக்கம் முதலீட்டாளர்களின் உறுதியான பார்வை திரும்பலாம். இதனால், உலகிலேயே மிகச்சிறந்த மற்றும் பாதுகாப்பான சொத்தாகக் கருதப்படும் தங்கத்தின் ஆதிக்கம் சற்று குறைந்து, பங்குச் சந்தைகளின் கை ஓங்கலாம். அதாவது, பங்குச் சந்தைகளில் நிச்சயமற்ற நிலை ஏற்படும் போதுதான் தங்கம் விலை அதிகரிக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து இவ்வாறு கணிக்கப்படுகிறது.
அமெரிக்க தேர்தலால் நிலையற்றுக் கிடந்த பங்குச் சந்தைகளில் வணிகம் சீரடைந்தால், மறுபக்கம் தங்கம் விலை உயர்வை மட்டப்படுத்தப்படும் ஆனால், அதுவே தங்கம் விலை வீழ்ச்சி என்ற நிலைக்கு எல்லாம் சென்றுவிடாது என்றும் குறிப்பிடுகிறார்கள். கடந்த 2016ஆம் ஆண்டு டிரம்ப் அமெரிக்க அதிபரான போது அவரது நடவடிக்கைகள் எதிர்பாராததாக இருந்தது. இதனால், பங்குச் சந்தைகளில் தள்ளாட்டம் இருந்தது. ஆனால், இந்த முறை, உலக நாடுகளும் நிறுவனங்களும் ஓரளவுக்கு டிரம்ப் அதிபரானால் எடுக்கும் நடவடிக்கைகளை சமாளித்துக்கொள்ள ஏற்கனவே பெற்ற அனுபவத்தின் மூலம் கற்றிருந்திருக்கலாம். எனவே பங்குச் சந்தைகளில் பெரிய இடியெல்லாம் விழாது, தங்கம் விலை ஏற்றத்துடன் இருந்து ஓரளவுக்குக் குறையும் என்றே கணிக்கப்படுகிறது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வந்திருப்பதால் பல்வேறு கொள்கை முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படும், இதனால் ஏற்றுமதி, தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களில் மாற்றம் போன்றவை ஏற்படலாம், இது தங்கத்தின் விலை உயர்வுக்குக் காரணமாகலாம் என்றும் கணிப்புகள் வெளியாகியுள்ளன.