1. Home
  2. தமிழ்நாடு

இந்தியாவிற்கு ஷாக் கொடுத்த டிரம்ப்..! மத்திய அரசு கொடுத்த பதில்..!

1

இந்தியாவுக்கு மேலும் 25 சதவீத வரி விதிக்கப்படுகிறது என டிரம்ப் இன்று அறிவித்து உள்ளார். இதனால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தம் 50 சதவீதம் வரி விதிக்கப்படும்.

ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது நிறுத்தப்பட வேண்டும் என டிரம்ப் காலக்கெடு விதித்திருந்த நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மருந்து பொருட்களுக்கான வரி விதிப்புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் வர்த்தகத்தில் பெருமளவில் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சி.என்.பி.சி. செய்தி சேனலுக்கு நேற்று அளித்த பேட்டி ஒன்றில் கூறும்போது, இந்தியா அதிக வரி விதிக்கும் நாடாக உள்ளது. நம் மீது, வேறு யாரையும் விட மிக அதிக வரியை இந்தியா விதிக்கிறது. அவர்களுடைய வரி அதிகம் என்பதனால், நாம் மிக மிக சிறிய அளவிலேயே அவர்களுடன் வர்த்தகம் செய்கிறோம்.

ஒரு நல்ல வர்த்தக உறவுக்கான நாடாக இந்தியா இருக்கவில்லை. அதனால், நாம் அவர்களுக்கு 25 சதவீத வரி விதித்திருக்கிறோம். அவர்கள் ரஷியாவிடம் இருந்து எண்ணெய்யை வாங்குகிறார்கள். இதனால், அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீது பெரிய அளவில் வரி விதிக்கலாம் என நான் நினைக்கிறேன் என டிரம்ப் கூறிய நிலையில் இந்த வரி விதிப்பு அறிவிப்பு வெளிவந்து உள்ளது.

டிரம்பின் இந்த அறிவிப்பை தொடர்ந்து மத்திய அரசு கூறியதாவது:“அமெரிக்காவின் நடவடிக்கை நியாயமற்றது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். அமெரிக்காவின் முடிவு துரதிர்ஷ்டவசமானது. ரஷ்யாவில் இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதை சமீப நாட்களாக குறிவைக்கிறது. இந்தியா தனது தேசிய நலன்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும். இந்தியாவின் இறக்குமதி சந்தை காரணிகளை அடிப்படையாக கொண்டது. 140 கோடி மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்தியா செயல்படுகிறது. ரஷியா எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் ஏற்கனவே எங்கள் நிலைப்பாட்டை விளக்கிவிட்டோம்” என்று தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like