கட்சிக்குள் வெடித்த பிரச்சனை..! மல்லை சத்யா மீது பரபரப்பு புகார்..!
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவிற்கு, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, வைகோ முன்னிலையில் இருவரும் கை குலுக்கிக் கொண்டு சமாதானம் அடைந்தனர்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மல்லை சத்யா மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதில், துரைவைகோவுடன் சமாதானம் செய்து வைக்கும்போது, மல்லை சத்யா மட்டும் முகம் வாட்டத்துடன் இறுக்கமாக உட்கார்ந்து இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதன் பிறகு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று எதுவும் பேசாத மல்லை சத்யா, வெளிநாடுகளுக்கு விஜிபி சந்தோஷ் என்பவருடன் சென்று வந்ததாக வைகோ கூறியுள்ளார். மேலும், மதிமுகவின் துணை பொதுச்செயலாளர் என்று கூறாமல், மாமல்லபுரம் தமிழ் சங்கத்தின் தலைவர் என்ற பெயரிலேயே ஏழெுட்டு முறை வெளிநாடுகளுக்கு சென்று வந்திருப்பதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தற்போது தனக்கு துரோகம் செய்து விட்டதாக வைகோ தெரிவித்துள்ளார். இதனிடையே, சென்னை பூந்தமல்லியில் இன்று நடைபெற உள்ள மதிமுக மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில், மல்லை சத்யாவின் படம் பேனரில் இருக்கக்கூடாது என்று அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.