முழுசா மாறும் திருச்சி... புது பேருந்து நிலையம், டைடல் பார்க், ஆம்னி பேருந்து நிலையம்...!
திருச்சியில் புது பேருந்து நிலையில், ஏக்கர் கணக்கில் விஸ்தாரமான இடத்தில் அமைந்துள்ள நிலையில், ஆம்னி பேருந்து நிலையமும் அமைந்திருக்கிறது. தற்போது கோவை, திருப்பூரைத் தொடர்ந்து திருச்சியில் டைடல் பார்க் அமைப்பதற்கு தமிழக அரசு ரூ.315 கோடி மதிப்பில் டெண்டர் கோரியுள்ளது.
சுமார் 5 லட்சம் சதுர அடியில் இந்த டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சாப்பூர் அருகே இந்த புதிய டைடல் பார்க் அமைய இருக்கிறது. பேருந்து நிலையம் திறக்கப்பட்டவுடன் திருச்சியின் முக்கிய பகுதியாக பஞ்சாப்பூர் மாறிவிடும் நிலையில், ஐடி துறையிலும் திருச்சி வளர்ச்சியை நோக்கி பயணிக்கப்போகிறது.
இந்த டைடல் பார்க் கட்டுமானப் பணிகளை 18 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5000 பணியாளர்களுக்கான அலுவலகம், கூட்ட அரங்கு, தரவு மையங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் இந்த டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தென்மாவட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும் வெளிமாநிலங்களில் இருந்தும் திருச்சியில் பணியில் அமர்த்தப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், வேலைவாய்ப்பு, நகர கட்டமைப்பு, பொருளாதாரம் என திருச்சி இனி மொத்தமாக மாற தயாராகி வருகிறது.