டிரெண்டாகும் போட்டோ..! நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்த சீமான்..!
தமிழ்நாட்டில் அடுத்த சட்டசபைத் தேர்தல் 2026ம் ஆண்டு தான் நடைபெற இருக்கிறது. ஆனால், இப்போது அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஆளும் தரப்பில் மாநிலம் முழுக்க முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.
மறுபுறம் அதிமுகவும் திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசத் தொடங்கிவிட்டது. இதுபோக தமிழக அரசியலில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய்யும் தனது அரசியல் கட்சியின் பணிகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்.
இந்தச் சூழலில் சீமான் இப்போது திடீரென நடிகர் ரஜினிகாந்த்தைச் சந்தித்துப் பேசியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இருவரும் தமிழ் சினிமா குறித்தும் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் பேசியதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசியலில் விஜய் வருகையை இப்போது சீமான் கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரஜினிகாந்தை சீமான் சந்தித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த்தை சீமான் நேரடியாகச் சந்தித்துள்ளார். போயஸ் கார்டனில் இருக்கும் நடிகர் ரஜினி இல்லத்திற்குச் சென்ற சீமான், அவரை சந்தித்துப் பேசியிருக்கிறார். சுமார் 40 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை இந்தச் சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் சினிமா உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இருவரும் உரையாடியுள்ளனர். தமிழ்நாடு அரசியலில் இந்த சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.