1. Home
  2. தமிழ்நாடு

ஆள் இல்லாத காரில் பயணித்தது இனிமையான சாகசம்போல அமைந்தது: மு.க.ஸ்டாலின்!

1

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக கடந்த ஆகஸ்ட்28 முதல் செப்டம்பர் 12-ம் தேதிவரை அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில், தனது பயண அனுபவத்தை தொண்டர்களுடன் பகிரும் வகையில் கடித தொகுப்பாக வெளியிட்டுள்ளார். ‘அமெரிக்க பயணச் சிறகுகள் (1)’ என்ற தலைப்பிலான முதல் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது:-

ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற பொருளாதார இலக்கை அடைய தேவைப்படும் உழைப்பை உணர்ந்தே, இந்த அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே அமெரிக்காவுக்கு கடந்த ஆக.27-ம் தேதி பயணித்தேன். தொடர்ந்து 16 மணி நேரம் ஒரே விமானத்தில் நீண்ட பயணம் என்பது சற்றே களைப்பை ஏற்படுத்தினாலும், சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் தமிழர்களின் முகங்களை பார்த்ததும் உற்சாகம் கொண்டேன். வரவேற்புக்கு பிறகு, அங்குள்ள பெருமை கொண்ட ஓட்டல் ஃபேர்மாண்ட்டில் தங்கினேன். இரவு ஓய்வுக்கு பிறகு, மறுநாள் காலையில் முதலீட்டாளர்கள் சந்திப்புக்கு ஆயத்தமானேன்.

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான நோக்கியா, அதைத்தொடர்ந்து, பே-பால், ஈல்டு இன்ஜினீயரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்ஃபிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம், அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனத்தினர் என்னை சந்தித்தனர். இதன்மூலம் ரூ.1,800 கோடி முதலீட்டில் 4,100 பேருக்கு வேலை அளிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டிய அமெரிக்க நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் நம் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இந்த சந்திப்பின்போது, கடந்த3 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சிக்காக வெளியிடப்பட்டுள்ள 14 கொள்கைகள் அடங்கிய வெளியீடுகளை அமெரிக்க நிறுவனங்களிடம் வழங்கி, அவற்றை விளக்கினேன். நமது கொள்கை குறிப்புகளை அவர்கள் பாராட்டினர்.

பகலில், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்ட நிலையில், மாலையில் முதலீட்டாளர்கள் உடனான மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்காவை சேர்ந்த 100-க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்றன. ‘‘தமிழகத்தில் 39,000 தொழிற்சாலைகளும், அதில் பணியாற்றக்கூடிய 26 லட்சம் பணியாளர்களும் இருப்பதால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு அதிகமாக உள்ளது. எனவே, முதலீடு செய்ய முன்வர வேண்டும். தேவைப்படும் கட்டமைப்புகளை தமிழக அரசு நிறைவேற்றி தரும்’’என்று தெரிவித்தேன்.

சென்னைபோல சான் பிரான்சிஸ்கோவில், ஐ.டி. நிறுவனங்கள் நிறைந்த பகுதியை ‘சிலிகான் வேலி’ என்கின்றனர். இங்குதான் ஆப்பிள், கூகுள், மெட்டா என உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. அங்கு, ஆப்பிள் நிறுவன உயர் அதிகாரிகளை சந்தித்தபோது, தமிழகத்தில் தங்கள் உற்பத்தி நிறுவனங்களை விரிவாக்கம் செய்வது குறித்து கருத்து பரிமாறப்பட்டது.

தொடர்ந்து கூகுள் நிறுவனத்துக்கு சென்றபோது, அங்கு பல பிரிவுகளிலும் தமிழர்கள் பலர் நல்ல பொறுப்பில் இருப்பது தெரிந்தது. கூகுள் உயர் அலுவலர்கள் உடனான சந்திப்பில், ‘‘தமிழகத்தின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் இடம்பெறும் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு துறையில் கூகுள் நிறுவனம் பயிற்சி அளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டேன். உடனடியாக ஒப்புக்கொண்ட கூகுள் நிறுவனத்தினர், தமிழகத்தில் 20 லட்சம் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு துறையில் பயிற்சி அளிக்கும் திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டனர்.

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்துடன் இணைந்து கூகுள் நிறுவனத்தின் இந்த பயிற்சி நடைமுறைக்கு வருகிறது. கூகுள் நிறுவனம் தற்போது ஃபோன், ட்ரோன் போன்ற தயாரிப்புகளிலும் முனைப்பாக இருப்பதால், அதுதொடர்பான பேச்சுவார்த்தைகளும் சுமுகமாக அமைந்தன.

அடுத்தாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கெனவே ரூ.2,570 கோடிக்கான முதலீடுகளுக்கு ஒப்பந்தம் போட்டிருப்பதால், அதை விரைவாக நிறைவேற்றுவது குறித்து உரையாடினோம். கூடுதல் முதலீடுகள் குறித்தும் பரிசீலிப்பதாகவும் உறுதி அளித்தனர். சிலிகான்வேலியில் உள்ள கோவை கஃபேயில் மதிய உணவு. பாரம்பரிய முறைப்படி வாழை இலையில், நம் ஊர் சாப்பாட்டை பரிமாறினர். பசிக்கேற்ற ருசியுடன் உணவு சிறப்பாக இருந்தது.

அன்று மாலை, சான் பிரான்சிஸ்கோவில் அமெரிக்க வாழ் தமிழர்கள், இந்தியாவின் பிற மாநிலத்தவர்களை சந்தித்தேன். அவர்கள் அளித்த வரவேற்பை தமிழக மக்கள் அனைவருக்குமான வரவேற்பாகவே கருதுகிறேன். மறுநாள் செப்.1-ம் தேதி ஓமியம் நிறுவனத்துடன் ரூ.400 கோடியில் 500 பேருக்கு வேலை அளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். தொடர்ந்து, சான்பிரான்சிஸ்கோவில் கடலுக்கும், மலைக்கும் இடையிலான சாலையில் ஆள் இல்லாத காரில் பயணித்தது இனிமையான சாகசம்போல அமைந்தது. இதையடுத்து, சிகாகோ நோக்கி விமானத்தில் பறந்தேன். ஐந்தரை மணி நேர பயணம்.

சான் பிரான்சிஸ்கோ போலவே சிகாகோ விமான நிலையத்திலும் அமெரிக்க வாழ் தமிழர்கள் திரண்டுஅளித்த வரவேற்பு, அடுத்தடுத்த சந்திப்புகளுக்கும், முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பெரும் நம்பிக்கையை அளிப்பதாக இருந்தது. இவ்வாறு அதில் முதல்வர் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like