வரும் 21ம் தேதி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்..!

அனைத்து போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலகங்கள் முன், வரும் 21ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - டி.டி.எஸ்.எப்., உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்து உள்ளன.
போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு தொடர்பான வழக்கில், தொடர்ந்து காரணங்களை சொல்லி, நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாமல், தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
ஓய்வு பெற்ற ஊழியர்களின் சிரமத்தை கருத்தில் வைத்து, விரைவாக முடிவு காண வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து ஊழியர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
இது, போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அரசு இனியும் தாமதிக்காமல் ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டும்.
ஓய்வு பெற்றவுடன் பணப்பலன் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வுக்கு தீர்வு காண வேண்டும். பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
வாரிசு வேலை வழங்க வேண்டும். காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அனைத்து போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலகங்கள் முன், வரும் 21ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.