லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு வந்த தபேதார் டிரான்ஸ்பர்..!
தலைநகர் சென்னையில் மேயரின் பெண் தபேதார் அதிரடியாக மணலிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அதற்கான காரணம் தான் வினோதமானதாகப் பார்க்கப்படுகிறது. இதுபற்றிய விவரம் வருமாறு:
சென்னை மேயர் ப்ரியாவின் டபேதாராக இருந்தவர் மாதவி (50). மேயர் செல்லும் இடங்களில் அரசு சம்பந்தமாகக் கூட்டங்கள், நிகழ்ச்சிகளுக்குச் செல்வோர் இவரைக் கட்டாயம் பார்க்கலாம். அதற்கு ஒரு காரணமும் உண்டு. எப்போதும் தபேதார் சீருடையில் இருக்கும் அவர் தமது உதட்டுக்கு லிப்ஸ்டிக் பூசிக் கொண்டு வருவதை வழக்கமாகக் கொண்டதாகத் தெரிகிறது.
எம்.எல்.ஏ., க்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், மக்கள் நல திட்ட நிகழ்ச்சிகள் என எங்கும் எந்நேரமும் பரபரப்புடன் மேயர் ப்ரியா செல்லும்போது அவரது முன்னே மாதவியும் அதே லிப்ஸ்டிக் பூசி பந்தாவாகச் சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மகளிர் தினத்தின்போது ரிப்பன் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பேஷன் ஷோவில் மாதவி கலந்து கொண்டது பார்ப்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளதோடு விமர்சனங்களை எழுப்பியதாகவும் தெரிகிறது.
அவரின் இது போன்ற நடவடிக்கைகளை அறிந்த மேயரின் தனி உதவியாளர் சிவசங்கர் என்பவர் மாதவியை அழைத்து விவரம் கேட்டுள்ளார். உதட்டுக்குச் சாயம் பூசிக் கொண்டு வருவது கூடாது என்றும் அவர் கண்டித்துள்ளார். ஆனால் தனி உதவியாளரின் பேச்சைக் கேளாமல் மாதவி உதட்டுச்சாயத்துடன் உலா வந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து, அவர் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கோரி, ஆகஸ்ட் 6ம் தேதி மெமோவும் வழங்கப்பட்டு உள்ளது. அதிகாரிகளின் உத்தரவுகளுக்குக் கீழ்படியவில்லை, என்ன காரணம் என்று கூறுமாறு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்குப் பதில் அளித்த தபேதார் மாதவி, இது போன்ற அறிவுறுத்தல்கள் மனித உரிமைக்கு எதிரானது. யாரிடமும் பேசக் கூடாது, உதட்டுச்சாயம் அணியக் கூடாது என்று எந்த அரசாங்க உத்தரவும் இல்லை. அது போன்ற உத்தரவுகள் இருந்தால் காட்டுங்கள் என்று கூறி உள்ளார். அதையே தமது விளக்கமாகவும் மேயரின் உதவியாளருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
மாதவியின் விளக்கத்தை ஏற்க மறுத்து, அவரை உடனடியாக மணலிக்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஒரு உதட்டுச்சாயம் பணியிட மாற்றம்வரை சென்றுவிட்டதே என்று பேச்சுகள் பெரிதாக மேயர் ப்ரியா தரப்பின் கவனத்துக்கும் சென்றது.
இதுகுறித்து அவர் தரப்பில் விசாரித்தபோது தெரியவந்த தகவல்கள் வருமாறு; மகளிர் தினம் கொண்டாட்டத்தின்போது பேஷன் ஷோவில் மாதவி கலந்து கொண்ட விதம், நடை, உடை பாவனைகள், தோற்றம்குறித்து பலரும் விமர்சித்தனர். அதுமட்டும் அல்லாமல் அவர் அணியும் உதட்டுச்சாயம் மற்றவர்களின் கவனத்தை திசை திருப்புவதாக உள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள் எனப் பலரும் வந்து செல்லும் ரிப்பன் மாளிகையில் இப்படியொரு தோற்றத்துடன் இருப்பது சரியில்லை என்று என உதவியாளர் மாதவியிடம் கூறி இருக்கிறார். அதற்கும், பணியிட மாற்றத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால் தபேதார் மாதவியின் விளக்கம் வேறுமாதிரியாக உள்ளது. மேயரின் உதவியாளர்கள் என்னிடம் உதட்டுச்சாயம் பளபளப்பாக இருக்கிறது, அதன் அளவை குறைக்கவும், கண்கள் கூசும் அளவுக்கு மின்னும் புடவைகள் அணிய வேண்டாம் என்று கூறிக் கொண்டு இருந்துள்ளனர் என்று கூறி இருக்கிறார்.
மாதவி, சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் என்பது குறிப்பிடத்தக்கது.