இன்று முதல் ரயில் முன்பதிவு காலம் 60 நாட்கள் மட்டுமே..!
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். அதனால் ஒவ்வொரு பயணியின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்திய ரயில்வே புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் ரயில்களில் பயண டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 120 நாட்களாக இருந்த டிக்கெட் முன்பதிவு காலம் (ARP - Advance Reservation Period) தற்போது 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய ரயில்வே துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “ரயில்களில் முன்பதிவு செய்வதற்கான கால வரம்பு 120 நாளில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படும். இது, நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இருப்பினும், அக்.31-ம் தேதி வரை, 120 நாட்களுக்கு முன்பதிவு செய்யும் காலத்தின் கீழ், அனைத்து முன்பதிவுகளும் அப்படியே இருக்கும். இதுபோல, நவ.1 ம் தேதிக்கு முன்பாக, முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை 60 நாட்களுக்குப் பிறகும் ரத்து செய்ய அனுமதிக்கப்படும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 365 நாட்கள் என்ற வரம்பில் எந்த மாற்றமும் இருக்காது. குறிப்பிட்ட பகல்நேர விரைவு ரயில்களான லைம் தாஜ் விரைவு ரயில், கோம்தி முன்பதிவு செய்வதற்கான வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.