சென்னை தாம்பரம்- சானடோரியம் இடையே ரயில் தடம்புரண்டு விபத்து..!
தாம்பரம்- சானடோரியம் இடையேயான பாதையில் சரக்கு ரயில் திடீரென தடம்புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. வாகனங்களை ஏற்றிச் செல்லும் சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் சற்று நேரத்திற்கு முன்பு தாம்பரம் சானடோரியம் இடையே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், மீட்புப் பணிகளில் இறங்கியுள்ளனர்.
இந்த சரக்கு ரயில் மின்சார ரயில்கள் பயன்படுத்தும் பிரத்தியேக பாதையில் செல்லவில்லை. மாறாகத் தனிப் பாதையிலேயே சென்றுள்ளது. அப்போது தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் நல்வாய்ப்பாகப் புறநகர் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. அதேநேரம் சம்பவ இடத்துக்கு ரயில்வே அதிகாரிகள், இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக கடந்த வாரம் தான் சென்னை- அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மார்க்கம் சிக்னல் கோளாறு காரணமாக மாலை நேரத்தில் ரயில் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. அப்போது ரயில்கள் சுமார் ஒரு மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.