#Train Accident : கடலூர் ரயில் விபத்துக்கு பள்ளி வேன் டிரைவர் செல்போன் பேசியது தான் காரணமா ?
கடலூர் மாவட்டம் சுப்பிரமணியபுரம் அருகே சின்னக்காட்டு சாகை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி திராவிட மணி – கலைச்செல்வி. இந்த தம்பதி, கிராமத்தில் கூறுவது போல் ஆசைக்கு ஒன்று, ஆஸ்திக்கு ஒன்று என இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இதில், மகள் சாருமதி 11ஆம் வகுப்பும், மகன் செழியன் 10ஆம் வகுப்பும் படித்து வந்தனர். குமாரபுரம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் படித்த இருவரும், நாள்தோறும் பள்ளி வாகனத்திலேயே சென்று வந்தனர். மகள் சாருமதியை மருத்துவராகவும், மகனை ஐஏஎஸ்-க்கு படிக்க வைத்து கலெக்டராகவும் ஆக்கி அழகு பார்க்க தாயும், தந்தையும் உயரிய குறிக்கோளுடன் இருந்துள்ளனர்.
பெரும் கனவுடன் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, வீடு திரும்பிய தந்தைக்கு அடுத்த அரை மணி நேரத்தில் அதிர்ச்சிகரமான தகவல் வந்துள்ளது. பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் சிக்கி மகள் இறந்துவிட்டதாக கூறியவர்கள், அடுத்த சில மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகனும் உயிரிழந்ததாக கூறியதை கேட்டு, தாயும் தந்தையும் மனம் உடைந்து நொறுங்கிப் போயுள்ளனர். யாரோ செய்த தவறுக்கும், அலட்சியத்திற்கும் தங்களது ஆசைக் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோருக்கு, ஆறுதல் கூற வார்த்தைகள் இன்றி உறவினர்களும், ஊர் மக்களும் கையறுநிலையில் நிற்பது கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாள்தோறும் காலையில் பள்ளிக்கு புறப்படும்போது, தந்தை திராவிடமணிதான், தனது இரு பிள்ளைகளையும் வேனில் ஏற்றிவிடச் செல்வார். வழக்கம்போல் இருவரையும் ஏற்றிவிட்ட பின்னர் கூலி வேலைக்கு செல்ல ஆயத்தமாகியுள்ளார். அடுத்த அரை மணி நேரத்தில் உங்கள் குழந்தைகள் சென்ற பள்ளி வேன் மீது, ரயிலில் மோதி விபத்தில் சிக்கியதாக திராவிட மணிக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கேட்டு தங்களது குழந்தைகளுக்கு என்ன ஆனதோ, ஏது ஆனதோ என பெற்றோர் பரிதவித்துள்ளனர்.
இன்று காலை கடலூரிலிருந்து ஆலப்பாக்கம் வழியாக சென்ற தனியார் பள்ளி வேன் ஆளில்லாத ரயில்வே கேட்டு தாண்டி செல்லும்போது மயிலாடுதுறை செல்லும் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்திற்கு காரணம் வேன் ஓட்டுநர் சங்கர் செல்போன் பேசியதனால் ஏற்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆளில்லாத ரயில்வே கேட்டில் தினமும் அந்த வழியாக வேன் ஓட்டிச் செல்லும் டிரைவருக்கு காலையில் சிதம்பரம் செல்லும் ரயில் வருவதை தெரிந்தும் கூட விபத்தில் சிக்கியது எப்படி என்று கேள்வி எழுப்புகின்றனர் மாணவர்களின் பெற்றோர்கள்.
செல்போன் பேசியதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என்கின்றனர் பெற்றோர்கள். ஏனென்றால் ஒரு பாஸ்ட் பேசஞ்சர் ரயில் ஆளில்லாத தண்டவாளத்தை கடக்கும் பொழுது ரயிலின் அதிர்வலைகள் நன்கு உணர முடியும் அதே நேரத்தில் ஆளில்லாத ரயில்வே கேட் கடக்கும்போது ரயில் ஓட்டுநர்கள் கண்டிப்பாக ஹாரன் அடிப்பார்கள் அந்த ஆறு சத்தத்தை கூட கேட்காமல் சங்கர் செல்போன் பேசியதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என்கின்றனர்.