திருவள்ளூர் அருகே சோகம்..! ஆவின் பால் பண்ணையில் இயந்திரத்தில் சிக்கி பெண் ஊழியர் உயிரிழப்பு
திருவள்ளூர் அருகே காக்களூரில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து, நாள் தோறும் சுமார் 90 ஆயிரம் லிட்டர் பால் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் வழக்கம்போல், முகவர்களுக்கு பால் அனுப்பும் பணி நடைபெற்று வந்தது. அப்பணியில், தரம் பிரித்து, பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் நிரப்பப்பட்ட பால் இயந்திரத்தில் இருந்து, கன்வேயர் பெல்ட்டில் வெளியே வரும் போது, அதனை டப்பில் அடுக்கும் பணியில், தற்காலிக ஊழியரான உமாராணி (30) ஈடுபட்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக உமாராணி அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டாவும், அவரது தலைமுடியும் கன்வேயர் பெல்ட்டில் சிக்கியது. இதனால் உமாராணி தலை இயந்திரத்தில் சிக்கி துண்டாகியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் டி.எஸ்.பி கந்தன், தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உமாராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, போலீஸார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த உமாராணியின் கணவர் கார்த்திக், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் இருக்கின்றனர். காக்களூர் – பைபாஸ் சாலை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், உமாராணி, கடந்த 6 மாதங்களாக ஆவின் பால் பண்ணையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து, திருவள்ளூர் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.