தஞ்சை அருகே சோகம்.. ஒரே மகனை கொலை செய்துவிட்டு பெற்றோர் தற்கொலை..!
கடன் பிரச்னை காரணமாக, பெற்ற ஒரே மகனை கொலை செய்துவிட்டு பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் அருகே ரெட்டிபாளையம் மனோ நகரைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் ராஜா (38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். திருவையாறில் டீக்கடையும் நடத்தி வந்தார். இவரது மனைவி கனகதுர்கா (32). மகன் ஸ்ரீவத்சன் (11) தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் வசிக்கும் ராஜாவின் சகோதரர் வினோத்துக்கு வாட்ஸ் அப்பில் வந்த குரல் பதிவு தகவலில், கடன் சுமை காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக ராஜா கூறியுள்ளார். இதுகுறித்து போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கள்ளப்பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது, 3 பேரும் வீட்டில் பிணமாகக் கிடந்தனர். இதையடுத்து 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ராஜாவுக்கு வணிகத்தில் கடன் சுமை அதிகரித்ததால், தான் குடியிருக்கும் சொந்த வீட்டை மற்றொருவருக்கு விற்றுள்ளார். ஆனால், வீட்டு மீதான வங்கிக் கடன் நிலுவையில் உள்ளதால், விற்பனை செய்த பணம் ராஜாவுக்கு வந்து சேரவில்லை.
இதனிடையே கடன் நெருக்கடி அதிகரித்ததால், ராஜா தனது மகனை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தன் மனைவியுடன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
கடன் பிரச்னை காரணமாக பெற்ற ஒரே மகனை கொலை செய்து விட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.