1. Home
  2. தமிழ்நாடு

திருப்பத்தூரில் நடந்த சோகம்...! மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உள்பட 3 பேர் பலி..!

1

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரம் (40), கூலி தொழிலாளி. இவரது மகன் லோகேஸ் (15), அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். 

இவர்கள் 2 பேரும் வனவிலங்குகளை வேட்டையாட ஏலகிரி மலைக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி இருவரும் உறவினரான பெருமாப்பட்டு கிராமத்தை சேர்ந்த கரிபிரான் (65) என்பவருடன், நாட்டு துப்பாக்கியுடன் நேற்று முன்தினம் இரவு வேட்டையாட சென்றனர்.

அவர்கள் திருப்பத்தூர் அடுத்த பெருமாப்பாட்டு, காளியம்மன் கோவில் வட்டம் மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலத்தின் வழியாக நடந்து சென்றனர். அந்த பகுதியில் சில விவசாயிகள் தங்களது வயல்களில் பயிரிட்ட பயிர்களை காட்டு பன்றிகளிடம் இருந்து பாதுகாக்க வயல்களை சுற்றி மின்வேலி அமைத்திருந்தனர். 

இதனை அறியாத இவர்கள் 3 பேரும் எதிர்பாராதவிதமாக அந்த மின்வேலியில் சிக்கிக் கொண்டனர். ஒருவரையொருவர் காப்பாற்ற முயன்று, 3 பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். 

நேற்று வயலுக்கு வந்த விவசாயிகள், அங்கு 3 பேர் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்ததை கண்டு  குரிசிலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், 

இரவு நேரத்தில் வனவிலங்குகள் மற்றும் காட்டுப்பன்றி தொல்லை காரணமாக நீதி என்பவர் தனது விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்சார ஓயர்கள் அமைத்து உள்ளார். 

நேரடியாக மின்சார கம்பம் மற்றும் விவசாய நிலங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் இணைப்பில் இருந்து திருட்டு தனமாக மின்சாரம் எடுத்து மின்வேலி அமைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து குரிசிலாப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே 3 பேரின் உடல்களும் வைக்கப்பட்டு இருந்த அரசு மருத்துவமனைக்கு. அவர்களது உறவினர்கள் திரண்டு வந்தனர். குடும்பத்தினர் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Trending News

Latest News

You May Like