புத்தாண்டில் சோகம்.. கூட்ட நெரிசலில் சிக்கி 12 பக்தர்கள் பலி.. பிரதமர் மோடி இரங்கல்..!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் கத்ரா நகரில் மாதா வைஷ்ணவி தேவி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பக்தர்கள் அதிக அளவில் இந்த கோவிலுக்கு யாத்திரையாக வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம்.
அந்த வகையில், ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு மாதா வைஷ்ணவி தேவி கோவில் அருகே அதிக அளவில் பக்தர்கள் கூடியுள்ளனர். அதிகாலை 2.45 மணியளவில், பக்தர்களில் ஒரு பிரிவினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் தகராறு முற்றி, ஒருவரை ஒருவர் தள்ளி விட்டுள்ளனர். இதில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. பலர் நெரிசலில் சிக்கி காயமடைந்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர்.
இதுபற்றி சமூக சுகாதார மையத்தின் மருத்துவர் கோபால் தத் கூறும்போது, “கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்; 13 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள், நாராயணா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். எனினும், பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது” என்றார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “காஷ்மீரில் மாதா வைஷ்ணவி தேவி பவனில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.
இந்த சம்பவம் பற்றி காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா மற்றும் அமைச்சர்கள் ஜிதேந்திரா சிங் மற்றும் நித்யானந்த ராய் ஆகியோருடன் பேசியுள்ளேன். தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கூறியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.