1. Home
  2. தமிழ்நாடு

தஞ்சையில் சோகம்..! ஆளுநரின் பாதுகாப்புக்காக சென்ற சப் இன்ஸ்பெக்டர் விபத்தில் பலி!

1

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் செந்தில்குமார். 49 வயதான இவர் ஆளுநர் ஆர்.என்.ரவி பாதுகாப்பு பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பாப்பாநாட்டை அடுத்துள்ள பரங்கி வெட்டிக்காடு அருகே சென்றுக் கொண்டிருந்தபோது, அதே சாலையில் எதிரே தேங்காய் ஏற்றி வந்த லாரி செந்தில்குமார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்த சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பாப்பாநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மோதியதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இறந்த சம்பவம் போலீசார் மற்றும் பொதுமக்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் இறந்த சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் செந்தில்குமாருக்கு மனைவி வனிதாவும், ஹரிணி, கீர்த்தனா ஆகிய 2 மகள்களும் உள்ளனர். செந்தில் குடும்பத்தினருக்கு ஆழ்நத இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க ஸ்டாலில் நிதி உதவியும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர் மாவட்ட தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவந்த திரு.செந்தில்குமார் (வயது 49) என்பவர் இன்று (19.10.2024) பிற்பகல் 3.15 மணியளவில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவிட்டு திரும்பும் வழியில் இருசக்கர வாகனத்தில் பட்டுக்கோட்டை சென்றபோது, தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை சாலையில் கறம்பியம் அருகில் எதிரில் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.

சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like