ஸ்ரீவில்லிபுத்தூரில் சோகம்..! மினி பஸ் கவிழ்ந்து 2 பள்ளி மாணவர்கள் பலி..!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு- வ.புதுப்பட்டி நோக்கி தனியார் மினி பேருந்தை இருளப்பராஜா என்பவர் இயக்கியுள்ளார். இந்த மினி பேருந்து 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த வ.புதுப்பட்டி கிறிஸ்டியான்பேட்டை போதர் குளம் கண்மாய் அருகே அதிவேகமாக வளைவில் திரும்பியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து பேருந்தானது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பின்னர் பொதுமக்கள் உதவியுடன் மினி பேருந்து நிமிர்த்தப்பட்டது. இந்த விபத்தில் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் வ.புதுப்பட்டியை சேர்ந்த நந்தகுமார் மற்றும் அதே ஊரை சேர்ந்த பாண்டி என்ற 2 பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பேருந்து அதிவேகமாக இயக்கியதே இந்த விபத்திற்கு காரணம் எனக் கூறி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த விபத்து குறித்து வத்திராயிருப்பு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.