கொள்ளிடம் ஆற்றில் சோகம்..! முதியவர் கழுத்தை கடித்து இழுத்து சென்ற முதலை..!
சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் சுந்தரமூர்த்தி (54) என்பவர் இன்று மதியம் அவருக்குச் சொந்தமான கால்நடைகளை குளிப்பாட்ட சென்றிருந்தார். இந்த நிலையில் சுமார் 1 மணியளவில் அவர் கால்நடைகளை குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது, பின்பக்கமாக வந்த முதலை ஒன்று அவரை தோள்பட்டையில் கடித்து இழுத்துச் சென்றது.
அருகில் இருந்த பெண் ஒருவர் அலறல் சத்தத்தைக் கேட்டு கிராம மக்களை அழைத்து வந்துள்ளார். உடனே கிராம மக்கள் குமராட்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் 4 மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு அவரது உடலை மீட்டனர்.
மீட்கப்பட்ட உடலை 4 மணி நேரத்துக்கும் மேலாக வைத்திருந்தும் சடலத்தை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தாசில்தாரும் இதுவரை வந்து எந்தவித விசாரணையும் நடத்தவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.