ஜல்லிக்கட்டில் சோகம்..! மாடு முட்டியதில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு..!

ஜல்லிக்கட்டுப் போட்டி மதுரை அவனியாபுரத்தில் காலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்தப் போட்டியை தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கிவைத்தார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இதுவரை 10 சுற்றுகள் முடிவடைந்துள்ளது. இதில், 20 மாடுபிடி வீரர்கள், 17 காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் 6 பேர் உட்பட மொத்தம் 43 பேர் இதுவரை காயமடைந்துள்ளனர். ஆக்ரோஷத்துடன் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில், 12 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மதுரை விளாங்குடியைச் சேர்ந்த நவீன் கலந்து கொண்டிருந்தார். களத்தில் சீறிப்பாய்ந்த காளை ஒன்று நவீனின் மார்பில் முட்டியது. இதில் பலத்த காயமடைந்த நவீனை, ரத்தக் காயங்களுடன் அங்கிருந்த மருத்துவக் குழுவினர் மீட்டு, மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு நவீனுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி மாடுபிடி வீரர் நவீன் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் போட்டியில், பங்கேற்ற மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள், காவலர்கள் உட்பட 45 பேர் காளைகள் முட்டியதில் காயமடைந்தனர். இதில் 12 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.